டிக் டொக் பிரபலம் ஒருவருக்கு, உந்துருளி வாங்க வீட்டில் நகைகளைக் களவாடிய யுவதி உள்ளிட்ட 7 பேரை, சாவகச்சேரி காவல்துறையினர் 29.07.2025 செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், டிக் டொக் சமூக வலைத்தளங்களில் தனது காணொளிகளைப் பதிவேற்றி தன்னைப் பிரபலமானவராக காட்டிக் கொண்டு வந்துள்ளார்.
குறித்த இளைஞனுடன் டிக் டொக் மூலம் அறிமுகமான சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த யுவதி, அவரை காதலித்து வந்துள்ளார்.
அந்தநிலையில் காதலனுக்காக, அதிநவீன உந்துருளி ஒன்றினை கொள்வனவு செய்வதற்குத் தனது வீட்டிலிருந்து சுமார் 19 பவுண் நகையைத் திருடி, அதனைக் காதலனிடம் கொடுத்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, வீட்டிலிருந்த நகைகள் காணாமல் போனமை தொடர்பில், யுவதியின் பெற்றோர் சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், யுவதி மீது சந்தேகம் கொண்டு அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது, வீட்டிலிருந்த நகைகளைத் திருடி, காதலனுக்கு வழங்கியதை ஒப்புக் கொண்டுள்ளார்.
யுவதியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில், குறித்த யுவதியின் காதலனைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும், வீட்டில் நகைகளைத் திருடிய யுவதி, அவரது காதலன், நகைகளைத் திருடுவதற்கு உடந்தையாகச் செயற்பட்ட யுவதியின் நண்பி, நகைகளை விற்க உதவியவர்கள், நகைகளை வாங்கியவர்கள் என 7 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 7 பேரும் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, அவர்களிடம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்படுகிறது