உலகப் புகழ்பெற்ற இந்திய இசைக்கலைஞர் ஹரிஹரன் மற்றும் தென்னிந்திய நடிகைகள் தமன்னா மற்றும் ரம்பா உள்ளிட்ட முன்னணி இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்ற வெள்ளிக்கிழமை இரவு (09.02.2024) யாழ்ப்பாணத்தில் நடந்த இசை நிகழ்வானது ரசிகர்களின் இடையூறுகளினால் இடைநிறுத்தப்பட்டு,பலர் கைது செய்யப்பட்டதுடன் மற்றும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தியாவில் உள்ள பிரபல தென்னிந்திய நடிகர் நடிகைகள் பலர் கலந்து கொண்டதால் யாழ்ப்பாணத்திலிருந்து ஏராளமான திரையுலக ஆர்வலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சிலருக்கு அனுமதி பற்றுசீட்டுக்கள் கிடைக்காதமையினால், கூரைகள் மற்றும் மரங்களில் ஏறி இசை நிகழ்வினை பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

பார்வையாளர்கள், அந்த இடத்தில் போடப்பட்டிருந்த போலீஸ் தடுப்புகளை உடைத்து, நிகழ்ச்சியின் கலைஞர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மேடைக்கு அருகில் வந்தனர்.
மக்களின் ஆவேசமான நடத்தையால் கச்சேரி நீண்ட நேரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதுடன், இடையூறு விளைவித்த சுமார் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
நடிகை ரம்பா மற்றும் ஒழுங்கமைப்பாளர்கள் உட்பட பலர் மேடையில் ஏறிய ரசிகர்களை மேடையை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டனர்.
இன்னும் சிலர் வீடியோ கேமராக்களுக்காக கட்டப்பட்ட தளங்களில் ஏறியதனால், கேமரா உபகரணங்களை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

யாழ்ப்பாணத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வெளிப்பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்து காயமடைந்த சுமார் 5 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
