2017ஆம் ஆண்டு பிரதமராக இருந்த போது வடமாகாண சுகாதார சேவையை மேம்படுத்தவதற்காக தன்னால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் இன்று மக்களிடம் கையளிக்க முடிந்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நவீன வைத்தியசாலைகளுடன் கூடிய சுகாதார வசதிகளை வடக்கு மாகாணம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மேல் மாகாணத்தைப் போன்று மேம்பட்ட சுகாதார சேவைகளைக் கொண்ட மாகாணமாக வடக்கின் சுகாதார சேவையை அபிவிருத்தி செய்வதே தமது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.
மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் வைத்திய புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையத்தை 26.05.2024 திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
நெதர்லாந்து அரசாங்கத்தின் ஆதரவுடன் 4500 மில்லியன் ரூபா செலவில் இந்த மருத்துவ சிகிச்சை நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இது வட மாகாணத்தில் உள்ள மிகப் பெரிய மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையம் என்பதோடு மனநல மறுவாழ்வுப் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு, ஆய்வுகூடம், கதிரியக்கப் பிரிவு, வெளிநோயாளர் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
நெதர்லாந்துத் தூதுவர் பொனி ஹோபேக் அவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவுப் பரிசையும் வழங்கி வைத்தார்.