வடமத்திய மாகாண முதலமைச்சராகப் பணியாற்றியபோது சட்டவிரோதமாக எரிபொருள் பெற்று அரசாங்கத்துக்கு நஷ்டம் விளைவித்ததாக இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் ‘ஊழல்’ குற்றத்தைச் செய்ததாகக் கூறி, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நவம்பர் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் நேற்று (28) உத்தரவிட்டுள்ளார்.
வடமத்திய மாகாண சபையின் முதலமைச்சராகப் பணியாற்றியபோது சட்டவிரோதமாக எரிபொருள் பெற்று அரசாங்கத்துக்கு நஷ்டம் விளைவித்ததாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தற்போது சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித்தை சிறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இரு தரப்பினரின் சட்டத்தரணிகளும் நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்து, வழக்குப் பொருட்கள் மற்றும் இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்கள் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குடன் தொடர்புடையவை என்பதால், அவற்றை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திகதி வழங்குமாறு கோரியுள்ளனர்.
கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை நவம்பர் 28ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித்துக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது. ரஞ்சித், கடந்த 2012ஆம் ஆண்டு செப்டெம்பர் 27 ஆம் திகதி முதல் 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம், வரை வடமத்திய மாகாண சபையின் முதலமைச்சராகப் பணியாற்றியபோது, சட்டவிரோதமாக எரிபொருள் பெற்று, அரசாங்கத்துக்கு இழப்பை ஏற்படுத்தியதன் மூலம் ஊழல் குற்றத்தைச் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், மற்றொரு ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித்துக்கு சமீபத்தில் கொழும்பு மேல் நீதிமன்றம் 16 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் கடுமையான சிறைத்தண்டனை விதித்தது. அந்த தண்டனையை எதிர்த்து ரஞ்சித் மேன்முறையீடு செய்துள்ளார்.










