ஐ. ஏ. காதிர் கான்
மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிலஸ்ஸ பகுதியில், நேற்று (11) இரவு இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவத்தையடுத்து, அப்பகுதியின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில், பலத்த வெட்டுக்காயங்களுக்குள்ளான பிலஸ்ஸ மாஸ் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்ற 28 வயதுடைய திருமணமான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளவராவார்.
இந்த மோதலில் காயமடைந்த மேலும் இருவர், குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த நபருக்கும் மற்றுமொரு பிரிவினருக்கும் இடையில் அண்மையில் ஏற்பட்ட மோதலின் பின்னர், அவருக்கு நெருக்கமானவர்கள் மோதலில் தலையிட்டதாகவும், மோதல் தீவிரமடைந்ததையடுத்தே, இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.