ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 269 பேர் பாதிப்பு.
800 வீடுகள் பாதிப்பு சுமார் 15 ஆயிரம் கால்நடைகள் மாயம் குஞ்சுக்குள மக்கள் வெளியேற முடியாத நிலை.
வடக்கில் டிட்வ புயல் காரணமாக மன்னார் மாவட்டம் வரலாறு காணாத பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் இன்னும் வீடுகளில் தங்கை உள்ளவர்களுக்கு கடற்படை மற்றும் விமானப்படை உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வடக்கில் மன்னார் மாவட்டத்தை பொருத்தவரையில் சுமார் 40 வருடங்களுக்குப் பின்னர் வரலாறு காணாத பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வரை பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் 30 ஆயிரத்து 569 குடும்பங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 27 ஆயிரத்து 269 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவு ஓரளவு பாதிப்பை எதிர்நோக்கி இருந்தாலும் நானாட்டான், முசலி, மாந்தை கிழக்கு மற்றும் மாந்தை மேற்கு பிரதேசங்கள் பாரிய பாதிப்பினை எதிர் நோக்கியது.
சுமார் 822 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 22 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில் 106 இடைத்தங்கல் முகாமகளில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பெரிய மடு, கூராய், சீது விநாயகபுரம் இசைமானத்தாழ்வு உட்பட பல பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் கடற்படை மற்றும் ஆகாய பட்டையின் உதவியுடன் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
பல ஆயிரம் கால்நடைகள் மாயம்
வடக்கில் அதிகமான கால்நடைகள் காணப்படும் பிரதேசமான மன்னார் மாவட்டத்தில் சுமார் 15 கால்நடைகள் இறந்தும் காணாமல் போய் உள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிப்பதாக வடமாகாண கால்நடை உற்பத்தி மாகாண பணிப்பாளர் வைத்திய கலாநிதி வசீகரன் தெரிவித்தார்.
பல பகுதிகள் இன்னும் நீரில் மூழ்கியுள்ள நிலையில் கால்நடைகள் தொடர்பான கணக்கெடுப்பு மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் நிலமை சீராகிய பின்னரே முழுமையான தகவல்களை பெற முடியும் என தெரிவித்தார்.
தொடர்பில் மன்னார் மாவட்ட செயலாளர் கனகேஸ்வரனை தொடர்பு கொண்டு கேட்டபோது மடு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட குஞ்சு குளம் பகுதியில் சுமார் 300 குடும்பங்கள் வெளி வர முடியாத நிலையில் வெள்ள நீர் வீதிகளை மறித்து காணப்படுகிறது.
அவர்களின் குடியிருப்புகள் உயரமான பகுதிகளில் காணப்பட்டாலும் குறித்த பகுதிக்கு செல்லும் பாதைகள் தாழ்வாகக் காணப்படுவதால் அனைத்து வீதிகளையும் வெள்ள நீர் மூடியுள்ளது.
அவர்களுக்கான உணவு விநியோகத்தை கடற்படை மற்றும் ஆகாயப் படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அதனை உரிய முறையில் மேற்கொள்ளக்கூடிய ஒழுகுபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் குறித்த பகுதிக்கு சென்று மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வார் என அவர் மேலும் தெரிவித்தார்.









