மனித உரிமைகள் அபிவிருத்தி தொடர்பான சர்வதேச குரல் அமைப்பின் மாநாடு தாமரை கோபுரத்தில் வெற்றிகரமாக நிறைவு
மனித உரிமைகள் அபிவிருத்தி தொடர்பான சர்வதேச குரல் (IVHRD) அமைப்பு “மனித உரிமைகள் மற்றும் நிலைபேறான எதிர்காலம் தொடர்பிலான சர்வதேச கலந்துரையாடல் மற்றும் வளமான எதிர்காலத்திற்கான குரல்” என்ற தலைப்பில் சர்வதேச மாநாட்டை 2026 கொழும்பு தாமரை கோபுரத்தில் வெற்றிகரமாக நடத்தியது. இம்மாநாடு ICT Lawyers Guild Sri Lanka உடன் இணைந்து, UN Partner Portal உலகளாவிய ஒத்துழைப்பு கட்டமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்தது.
டிஜிட்டல் யுகத்தில் மனித உரிமை சவால்கள்
“டிஜிட்டல் யுகத்தில் மனித உரிமைகளுக்கு எதிராக வளர்ந்து வரும் சவால்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற குழு கலந்துரையாடலில் சட்டம், நீதி, ஆட்சி மற்றும் இணையப் பாதுகாப்பு துறைகளை உள்ளடக்கியதாக இடம்பெற்றது. இந்தக் குழுவில் ICT சட்டக்குழுத் தலைவரும் சட்டத்தரணியுமான கலாநிதி சுனில் டி.பி. அபேயரத்ன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண, இந்திய உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் லின்கன் குளோபல் சட்ட வர்த்தக தலைவருமான பிரபாகரன் ராமச்சந்திரன், செயற்கை நுண்ணறிவு மற்றும் இணைய பாதுகாப்பு ஆலோசகர் பிரதீப கணேஹிராச்சி இந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மனித வாழ்வியல் கலந்துரையாடலில் செயற்கை நுண்ணறிவு (AI), இணைய பாதுகாப்பு அபாயங்கள், டிஜிட்டல் கண்காணிப்பு, தரவு பாதுகாப்பு. ஆன்லைன் பாதுகாப்பு போன்ற தொழில்நுட்ப மற்றும் சட்ட சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இதேவேளை, தொழில்நுட்ப மாற்றங்கள் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. சமூக தொடர்புகள், வேலைத்தளங்கள், கல்வி அமைப்புகள், நீதி அணுகல் ஆகியவை டிஜிட்டல் மாற்றத்தால் எவ்வாறு மாற்றமடைந்துள்ளன என்பது தொடர்பாகவும், அதனால் உருவாகும் இணையதள துஷ்பிரயோகம், சைபர் குற்றங்கள், தவறான தகவல் பரவல், தனியுரிமை பாதுகாப்பில் ஏற்படும் தாக்கம் மற்றும் மனநல அழுத்தங்கள் போன்ற புதிய சவால்களும் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மனித உரிமை சவால்கள் இன்று நீதிமன்றங்களிலும் கொள்கை அரங்குகளிலும் மட்டுமல்லாது, சாதாரண பொது மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் பிரதிபலிக்கின்றன என்பதை இந்தக் குழு வலியுறுத்தியது. மனித மதிப்பு. கண்ணியம், தனிநபர் சுதந்திரம், சமத்துவம், மனநல நலம் மற்றும் ஒழுக்கப் பொறுப்பு ஆகியவை தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கும் சட்டப் புதுப்பிப்பிற்கும் வழிகாட்டும் அடிப்படைத் தத்துவங்களாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மனித உரிமைகள் சட்டப்பூர்வ கடமைகளாக மட்டும் அல்லாது, சமூகத்தில் பாதுகாப்பு, சமத்துவம் மற்றும் மரியாதையை உணரச் செய்யும் உயிருள்ள மதிப்புகளாகக் கருதப்பட வேண்டும் என மனித உரிமைகள் அபிவிருத்தி தொடர்பான சர்வதேச குரல் அமைப்பின் தலைவர் ரகு இந்திரகுமார் உரையாற்றும் போது தெரிவித்தார்.
மேலும் ICT சட்டக்குழு அமைப்பின் ஒத்துழைப்பிற்கும், சட்டம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பில் சைபர் தாக்குதல்கள், நீதி, டிஜிட்டல் உரிமைகள் மற்றும் ஒழுக்க ஆட்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியமை தொடர்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இந்த சர்வதேச உரையாடல் ஊடாக நாடளாவிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் தொழில்நுட்ப முன்னேற்றமும் மனித மதிப்புகளும் ஒன்றோடொன்று இணைந்து செயற்பட வழிவகுக்க வேண்டும். உரிமை அடிப்படையிலான உட்புகுத்தலுடன் கூடிய மற்றும் சமூக நீதியை நிலைநிறுத்தும் எதிர்காலத்தை உருவாக்கும் IVHRD அமைப்பின் நோக்கம் இவ்வாறான மாநாடுகள் ஊடாக மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது









