இனிவரும் காலங்களில் மதுபோதையில் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக, போக்குவரத்துச் சட்டங்களுக்கு மேலதிகமாகக் குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் வீதி பாதுகாப்புப் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. ஜி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போதைப்பொருள் மற்றும் மதுப்பாவனையே இந்த விபத்துக்களுக்குப் பிரதான காரணம் எனக் குறிப்பிட்ட அவர், இனிவரும் காலங்களில் இத்தகைய விபத்துக்களின் போது போக்குவரத்துச் சட்டங்களுக்குப் மேலதிகமாக குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
“கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் வீதி விபத்துக்கள் 271 ஆல் அதிகரித்துள்ளன. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 317 ஆல் அதிகரித்துள்ளது. இருப்பினும், பாரிய விபத்துக்களின் எண்ணிக்கையில் ஓரளவு வீழ்ச்சி காணப்படுகிறது.
குறிப்பாக, சாரதிகளின் கவனக்குறைவு மற்றும் அஜாக்கிரதையான செயற்பாடுகளே இந்த விபத்துக்கள் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
நாளாந்த விபத்துக்களை ஆராயும் போது, பாதசாரிகளே அதிகளவில் விபத்துக்களுக்குள்ளாகின்றனர்.
வருடாந்த விபத்துக்களில் 31 சதவீதமானவை பாதசாரிகள் தொடர்பானவையாகும். அதேபோல் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பின்னால் அமர்ந்து பயணப்பவர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளும் அதிகளவில் விபத்துக்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.
பல விபத்துக்களுக்குப் போதைப்பொருள் மற்றும் மதுப்பாவனையே காரணமாகிறது என்பதைத் தெரிவிக்க விரும்புகிறோ
இதற்கமைய, இனிவரும் காலங்களில் மதுபோதையில், போதைப்பொருள் பாவித்துக் கவனக்குறைவாக வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராகக் குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்” என்றார்.

December 29, 2025
0 Comment
14 Views









