பேலியகொடை மெனிங் பொதுச் சந்தையின் அன்றாட நிதி கொடுக்கல் வாங்கல்களை மிகவும் முறைப்படுத்தும் நோக்கில், புதிய இணையவழி (Online) கொடுப்பனவு முறைமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய முறைமை, 02.02.2026 முற்பகல் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர ஆகியோரின் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
fmis.uda.lk என்ற இணையத்தள நுழைவாயிலின் ஊடாகச் செயற்படும் இந்த நவீன முறைமையின் மூலம், சந்தையிலுள்ள வர்த்தக சமூகத்தினர் தமது வரிப்பணம் மற்றும் ஏனைய அன்றாட கொடுப்பனவுகளை மிகவும் இலகுவாகத் தமது கைபேசிகள் ஊடாக மேற்கொள்ள இனிமேல் சந்தர்ப்பம் கிடைக்கும்.
நாட்டின் மொத்த விற்பனைத் துறையில் முன்னிலையிலுள்ள மெனிங் சந்தை இவ்வாறு டிஜிட்டல் மயமாக்கப்படுவது, அரசாங்கத்தின் தேசிய டிஜிட்டல் மாற்ற மூலோபாயத்தின் ஒரு முக்கிய வெற்றியாகும் என பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.
பணமில்லா (Cashless) கொடுப்பனவு முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் வர்த்தகர்கள் தமது வியாபார நடவடிக்கைகளில் காலத்தை மிச்சப்படுத்திக் கொள்ள முடியும் எனவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதன் மூலம் வரிசைகளில் காத்திருக்கும் சிரமத்திலிருந்து விடுபட முடிவதுடன், கொடுப்பனவுகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் நிதி பாதுகாப்பு என்பன உச்சகட்டமாக உறுதிப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த முறைமையை எதிர்காலத்தில் நாடு முழுவதிலுமுள்ள ஏனைய பொருளாதார மத்திய நிலையங்களுக்கும் விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.










