புத்தளம்
வரலாற்றுத்துறைப் பேராசிரியரும் ஆய்வாளருமான ஹுஸைன்மியா அவர்கள் 25.05.2025 ஞாயிற்றுக்கிழமை புத்தளம் நகருக்கு வருகைதந்திருந்தார். அவரின் விஜயத்தை மலேசியா இஸ்லாமிய சர்வதேச பல்கலைக்கழகத்தில், ஒப்பீட்டு மத ஆய்வில் கலாநிதிப்பட்டம் பெற்ற, அஷ்ஷேக் கலாநிதி ஆஸாத் ஸிராஸ் அவர்கள் நெறிப்படுத்தினார்.
கொழும்பு, மாளிகாவத்தையைச் சேர்ந்த பேராசிரியர் ஹுஸைன்மியா அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையில் சிறப்புப்பட்டம் பெற்று, அங்கு விரிவுரையாளராகக் கடமையாற்றி அதன் பின்னர் தனது மேற்படிப்பை நிறைவுசெய்ததுடன் மியாமி, புளோரிடா சர்வதேசப் பல்கலைக்கழகம், புரூணை தாருஸ்ஸலாம் பல்கலைக்கழகம் போன்றவற்றில் நீண்டகாலம் பணியாற்றியிருந்தார். மேலும் இவர் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு விரிவுரையாளரும் ஆவார்.
கல்வி மேம்பாட்டுக்கும் சீர்திருத்தத்துக்குமான புத்தளம் கல்வியியலாளர்களின் மன்றத்தின்(PILLARS) ஏற்பாட்டில் பேராசிரியருடனான சந்திப்பொன்று புத்தளம் கொழும்பு முகத்திடலில் (Colombo Face) அமைந்துள்ள Blue Ripples இல் இடம்பெற்றது. இதில் புத்தளம் நகரக் கல்விமான்கள், சமூகத்தலைமைகள், பிரமுகர்கள் போன்றோர் கலந்துகொண்டு சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயம் அவர் தெரிவித்த புரட்சிகரக் கருத்துக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தன.
இந்நிகழ்வின் ஆரம்பத்தில் PILLARS தலைவர் இஸட். ஏ .ஸன்ஹிர் வரவேற்புரை நிகழ்த்த, அதன் உறுப்பினர்களுள் ஒருவரான கலாநிதி ஆஸாத் ஸிராஸ் (நளீமி) அவர்கள், பேராசிரியர் பற்றிய அறிமுகம் ஒன்றை வழங்கியிருந்தார். கலந்துரையாடலின் பின்னர் PILLARS உறுப்பினர் புத்தளம் மரைக்கார் அவர்கள், தான் எழுதிய கவிதை நூல்களை பேராசிரியருக்கு அன்பளிப்பு செய்திருந்தார். இறுதியில் PILLARS செயலாளர் றினாஸ் முஹம்மத் நன்றியுரை வழங்கப்பட்டது.
Blue Ripples இல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பேராசிரியர் ஹுஸைன்மியா அவர்கள், புத்தளம் இஸ்லாஹியா மகளிர் கல்லூரிக்கு விஜயம்செய்து, அங்கு சிரேஷ்ட மாணவிகள் மத்தியில், மாணவர்கள் பருவ வயதில் எதிர்கொள்ளும் சவால்கள், மன அழுத்தங்கள் மற்றும் தற்கால நடைமுறைப் பிரச்சினைகள் குறித்து உரையாற்றினார். அத்துடன், இஸ்லாமிய நடைமுறைகளை வழிநடாத்துவது பற்றியும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பேராசிரியர் அவர்கள், இஸ்லாஹியாக் கல்லூரி முதல்வர் அஷ் ஷேய்க் பஸ்லுல் பாரிஸ் (நளீமி) அவர்களிடம், கல்லூரியின் வசதிகளை மேம்படுத்த சர்வதேச நன்கொடை நிறுவனங்களை அணுகுமாறும் கேட்டுக்கொண்டார். மேலும், ஆன்மீக விழுமியங்களை முதன்மைப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ள இக்கல்லூரியில், தற்கால சூழ அமைவுக்கு ஏற்ற வசதி வாய்ப்புகள், திறமைகள் இன்றைய மாணவர்களிடம் வளர்க்கப்படவேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்ததுடன் இம்மாணவிகளை செயற்கை நுண்ணறிவு மற்றும் எதிர்கால தொழில்களுக்கு தயார்படுத்துமாறும் வேண்டியிருந்தார்.
மேலும் பேராசிரியர் ஹுசைமியாவின் புத்தளம் விஜயத்தின்போது, அவர் தனது பல்கலைக்கழக நண்பரும் முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் நாயகமுமான M.H.M.M. மஹ்ரூப் மரைக்கார் அவர்களை, பல தசாப்தங்களில் பின்னர் சந்தித்தமை ஒரு சிறப்பம்சமாகும்.



