எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் செல்லும் பொதுமக்களின் நலன்கருதி இன்று (09) முதல் எதிர்வரும் 21ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் ரயிவே திணைக்களம் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை என்பவற்றை இணைத்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அந்தவகையில், கண்டி, புத்தளம், ஹய்லெவல்/லோலெவல், தம்புள்ள மற்றும் காலி ஆகிய பிரதான ஐந்து நுழைவாயில்களைக் கேந்திரப்படுத்தி இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியன இணைந்து தூரப் பிரதேசங்களுக்கான பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் குறித்த காலப்பகுதியில் சேவையில் ஈடுபடும் பஸ் சேவைகளுக்கு மேலதிகமாக 500 போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த பஸ் சேவைகளுக்கு நிகராக இலங்கை ரயில்வே திணைக்களம், கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பதுளை, கண்டி மற்றும் காலி ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் பயணிகளுக்காக மேலதிக ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளது.
இதேவேளை, மாக்கும்புர, கடவத்த, கடுவெல மற்றும் கொழும்பு பெஸ்டியன் மாவத்தையை கேந்திரப்படுத்திய அதிவேக வீதியூடாக காலி, கண்டி, மாத்தறை, பதுளை, தங்காலை, கதிர்காமம் ஆகிய பகுதிகளுக்கு 350 போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்புத்தாண்டு காலப்பகுதியில் சொந்த இடங்களுக்குச் செல்வதற்காக கொழும்பை அண்டிய பஸ்தரிப்பிடங்களில் சுமார் 08 இலட்சம் பயணிகள் வந்தடைவரென எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு வரும் பயணிகளின் நலன்கருதி சுகாதார வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்ட முதலுதவி வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
அத்தோடு, இக்காலப்பகுதிக்குள் 24 மணிநேரமும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் அமைக்கப்பட்டுள்ள அதேவேளை, 1955 என்ற துரித தொலைபேசி இலக்கம் மற்றும் 071 259 5555 என்ற வட்ஸ்அப் இலக்கத்தினூடாகவும் தொடர்பு கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோன்று, இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் தொடர்பிலான தகவல்களைப் பெற்றுக்கொள்ள 1958 என்ற துரித இலக்கத்தையும் 1971 என்ற இலக்கத்தையும் தொடர்பு கொள்வதனூடாக ரயில்கள் தொடர்பிலான தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.
இக்காலப்பகுதிக்குள் பயணிகளிடம் மேலதிக கட்டணம் அறவிடப்படுமாயின் அது தொடர்பில் பரிசோதிப்பதற்கு பிரதான நுழைவாயில்களை மையப்படுத்தி 24 மணிநேரமும் இயங்கக்கூடிய நடமாடும் பரிசோதனைச் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சொந்த இடங்களை நோக்கிச் செல்லும் மக்கள் மீண்டும் கொழும்பு நோக்கி வருவதற்கான உரிய மாகாணப் போக்குவரத்து அதிகாரிகளுடன் இணைந்து பஸ் சேவைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன