2024/2025 ஆண்டுக்கான ஹஜ் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஹஜ் குழுவினை புத்தசாசன, மத மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி நியமித்துள்ளார்.
புதிய ஹஜ் குழு தலைவராக சமூக செயற்பாடுகளில் முன்னின்று செயற்பட்டு வரும் பட்டயக் கணக்காளர் ரியாஸ் மிஹ்லார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கே.பி எம்.ஜி சர்வதேச கணக்காய்வு நிறுவனத்தின் சர்வதேச நிதி அறிக்கை தரப்படுத்தல் பிரிவின் மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய பிராந்திய பொறுப்பாளாரான இவர் ஸ்ரீலங்கா டெலிகொம், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகம் ஆகியவற்றின் தலைவராகவும் பைறஹா , நெஸ்லே உள்ளிட்ட பல பெரு வணிகங்களில் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்தக்குழுவின் ஏனைய அங்கத்தவர்களாக விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் செயலாளரும் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளருமான அஷ்ஷெய்க் வை.எல்.எம். நவவி, அவர்களும்
சிரேஷ்ட சட்டத்தரணியும் தேசிய சூரா சபையின் முன்னாள் தலைவரும் இலங்கை மலே கூட்டமைப்பின் தலைவருமான அல்ஹாஜ் டி.கே. அசூர், அவர்களும்
சுற்றுலாத்துறையில் கலாநிதி பட்டம் பெற்று தற்போது சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சுற்றுலா முகாமைத்துவ பிரிவில் பேராசிரியராக கடமையாற்றும் எம்.எஸ்.எம். அஸ்லம் அவர்களும்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளர் என்ற வகையில் எம்.எஸ்.எம். நவாஸ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான கடிதங்கள் அடுத்து வரும் தினங்களில் உத்தியோகப்பூர்வமாக வழங்கப்படவுள்ளன.
ஹஜ் குழுவின் தலைவராக இருந்த ஓய்வுபெற்ற இலங்கை வெளிநாட்டு சேவைகள் தர அதிகாரியான இப்ராஹிம் அன்சார் அவர்களின் நிருவாகத்தில் 2025 க்கான ஹஜ் முகவர்கள் தெரிவு முடிவுற்றது.
அதில் உயர்நீதிமன்ற ஹஜ் வழிகாட்டலாகள் பின்பற்றப்படவில்லை என 14 முகவர்களால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவின் விளைவாக ஏற்கனவே தெரிவான 88 ஹஜ் முகவர்களினது உரிமமும் ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட ஹஜ் கோட்டாக்களையும் நீதிமன்றம் கடந்த வாரம் இரத்து செய்தது.
நீதிமன்ற ஹஜ் வழிகாட்டல்களை பின்பற்றி மீண்டும் புதிதாக ஹஜ் முகவர்களுக்கான நேர்முகப் பரீட்சையை நடாத்தி கோட்டாக்களை பகிருமாறும் உத்தரவிட்டிருந்தது.
இதன் பின்னரே இந்த புதிய அரச ஹஜ் குழு தற்போது நியமிக்கப்பட்டுள்ளது.