ஜனநாயகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை, பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்தின் ஐக்கிய இராச்சியக் கிளை (CPA UK) மற்றும் ஜனநாயகத்திற்கான வெஸ்மின்ஸ்டர் மன்றம் (WFD) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களைத் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டம் கடந்த 22ஆம் திகதி சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையில் இடம்பெற்றது.
ஜனநாயகத்திற்கான வெஸ்மின்ஸ்டர் மன்றத்தின் தலைவரும், ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற உறுப்பினருமான யஸ்மின் குரேஷி (Yasmin Qureshi) உள்ளிட்ட தூதுக் குழுவினர், இலங்கை – ஐக்கிய இராச்சிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவர் அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பற்ரிக் (Andrew Patrick), பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பதவியணித் தலைமை அதிகாரியும் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.
ஐக்கிய இராச்சியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவை நினைவு கூர்ந்த சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இரு நாடுகளுக்கும் இடையில் வலுவான ஜனநாயக உறவுகளை உருவாக்குவதில் இத்தகைய திட்டங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் சட்டமன்றத்தின் செயற்பாடுகள், வகிபாகம் மற்றும் தரநிலைகள், வரவுசெலவுத்திட்ட மேற்பார்வை, பொது மக்களின் ஈடுபாடு தொடர்பில் கவனம் செலுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சித்திட்டம் அமையும் என்றும் இரு நாடுகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவைப் பகிர்ந்து கொள்ளவும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் ஒரு மதிப்புமிக்க வாய்ப்பாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஜனநாயகத்திற்கான வெஸ்மின்ஸ்டர் மன்றத்தின் தலைவரும், ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற உறுப்பினருமான யஸ்மின் குரேஷி, பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்தின் ஐக்கிய இராச்சியக் கிளை பல ஆண்டுகளாக இலங்கைப் பாராளுமன்றத்துடன் மிக நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும், இந்தத் திட்டம் ஜனநாயகத்தின் மதிப்புகளை நன்கு புரிந்துகொள்ள உதவும் என்றும் கூறினார்.
இந்தத் திட்டம் சட்டவாக்கங்களை வலுப்படுத்துவதற்கும், தொழில்முறை வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், பரஸ்பர புரிந்துணர்வை விரிவுபடுத்துவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என இங்கு உரையாற்றிய பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
இந்த நிகழ்வுக்கு முன்னர் ஐக்கிய இராச்சியத்தின் தூதுக் குழுவினர் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். இச்சந்திப்பில் பாராளுமன்றத்தின் நடைமுறைகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து தூதுக் குழுவிற்கு சபாநாயகர் விளக்கமளித்தார்.
புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களைத் தெளிவுபடுத்தும் இந்த நிகழ்ச்சித்திட்டம் 24ஆம் திகதி வரை தொடரும்.