பிலிப்பைன்ஸ் கடற்கரையில் இன்று காலை 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.
சில பகுதிகளில் லேசான அதிர்வுகள் உணரப்பட்டதாக அறிக்கைகள் தெரிவித்தாலும், பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை.
இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 24.06.2025 செவ்வாய்க்கிழமை காலை 9:59 மணிக்கு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது பிலிப்பைன்ஸ் தீவுகளின் கிழக்கே, ஆரம்ப மதிப்பீட்டின்படி 6.2 மைல்கள் (10 கிலோமீட்டர்) ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதி, தாவோ மாகாணத்தின் பகுலின் நகரிலிருந்து சுமார் 232 மைல்கள் (374 கிலோமீட்டர்) தொலைவிலும், தாவோ நகரிலிருந்து சுமார் 300 மைல்கள் (483 கிலோமீட்டர்) தொலைவிலும் அமைந்திருந்ததாக USGS தெரிவித்தது.
ஹவாயில் உள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எந்தவொரு சுனாமி எச்சரிக்கைகளையோ அல்லது ஆலோசனைகளையோ வெளியிடவில்லை.
இந்த நில அதிர்வு சுமார் 20 வினாடிகள் நீடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் குடியிருப்புகள் இல்லை என்பதால், உயிரிழப்பு வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் மதிப்பிட்டுள்ளது.