2024ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் 11வது பிரிவுக்கு அமைய ‘நிதி செயல்நுணுக்கக் கூற்று’ தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று (30) நடைபெற்றது. அதனை தொடர்ந்து எதிர்வரும் ஜூலை 8 செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30 மணி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
2024ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் 11வது பிரிவுக்கு அமைய அரசாங்கத்தினால் நிதி செயல்நுணுக்கக் கூற்று ஜூன் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட வேண்டும் என்ற தேவையைப் பூர்த்திசெய்யும் நோக்கிலேயே பாராளுமன்றம் விசேடமாகக் கூட்டப்பட்டிருந்தது.
இதற்கு அமைய, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சர் சார்பில் தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான கலாநிதி அணில் ஜயந்த அவர்கள் ‘நிதி செயல்நுணுக்கக் கூற்றை’ பாராளுமன்றத்தில் அறிவித்தார். இரண்டு பிரிவுகளைக் கொண்ட இந்தக் கூற்று மக்கள் அறிந்து கொள்வதற்காக நிதி அமைச்சின் இணையத்தளத்தில் பகிரங்கப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இடைக்கால வழிகாட்டல் தொகுப்பான இந்தக் கூற்றின் ஊடாக அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவத்தின் மூலம் அடையவேண்டிய இலக்குகள் புள்ளிவிபரங்களுடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும் சம்பந்தப்பட்ட அபாயங்களைக் குறைத்து, அந்த இலக்குகளை எவ்வாறு அடைவது என்பது குறித்தும் இது குறிப்பிடுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பராளுமன்ற உறுப்பினர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன நிதி செயல்நுணுக்கக் கூற்றுத் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்து விவாதத்தை ஆரம்பித்தார்.
இவ்விவாதத்தில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர். இவ்விவாதம் பிற்பகல் 4.45 மணி வரை இடம்பெற்றது.

June 30, 2025
0 Comment
114 Views