2026.01.06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படவுள்ள கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மற்றும் கடற்றொழிலாளர் ஓய்வூதிய சமூகப்பாதுகாப்பு நலன்புரித் திட்டச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டன.
கௌரவ அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் நேற்று (05) கூடிய கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் கௌரவ பிரதியமைச்சர் ரத்ன கமகே அவர்களும் கலந்துகொண்டார்.
சேற்று நண்டின் மேலோட்டின் மிகப்பரந்த பாகத்தில் அளவிடப்பட்ட 130 மில்லிமீற்றருக்கு குறைவான மேலோட்டு அகலத்தைக் கொண்ட சேற்று நண்டுகளைப் பிடித்தலோ, விற்பனை செய்தலோ, உடமையில் வைத்திருத்தலோ, பதனிடுதலோ அல்லது ஏற்றுமதி செய்தலோ கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதியினால் தடைசெய்யப்படுகின்றது. மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை இதனை மதிப்பாய்வு செய்து ஒழுங்குவிதியைத் திருத்துவது என்ற அடிப்படையில் இதனை சமர்ப்பிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், மீனவர்களின் பங்களிப்புடனான ஓய்வூதியத்தை வழங்குவது தொடர்பான ஏற்பாடுகளைச் செய்யும் வகையில் கடற்றொழிலாளர் ஓய்வூதிய சமூகப்பாதுகாப்பு நலன்புரித் திட்டச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது பற்றிக் கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் கௌரவ அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், இந்த ஓய்வூதியத் திட்டத்தில் மீனவர்களை இணைத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வுத் திட்டங்கள் எதிர்வரும் வாரங்களில் முன்னெடுக்கப்படும் என்றும், கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையுடன் இணைந்து மீன்பிடி அமைச்சு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார். இத்திட்டத்தில் அதிகமான மீனவர்களை இணைத்துக் கொள்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாக கௌரவ பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறுகின்ற சட்டவிரோதமான மீன்பிடி முறைகளைத் தடுப்பது உள்ளிட்ட மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதியமைச்சர்கள் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.










