கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவர் பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
“பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு உலகம் இன்று இரங்கல் தெரிவிக்கிறது. கத்தோலிக்க திருச்சபையைத் தாண்டி, அவர் தனது பணிவு மற்றும் ஏழைகள் மீதான தூய அன்பின் மூலம் கோடிக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்தினார்.
இந்த ஆழ்ந்த இழப்பை உணரும் அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. பாப்பரசர் பிரான்சிஸின் மரபு நம்மை நீதியான, அமைதியான மற்றும் இரக்கமுள்ள உலகத்தை நோக்கி தொடர்ந்து வழிநடத்தும். அவரது ஆன்மா ஆறுதல் காணட்டும்.” என தெரிவித்துள்ளார்.
பாப்பரசர் பிரான்சிஸ் காலமானதைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“பாப்பரசர் பிரான்சிஸ், சாந்தியடையட்டும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனுடன் . பாப்பரசர், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் உடன் தனித்தனி சந்தர்ப்பங்களில் பாப்பரசர் சந்தித்த புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்தியா வந்துள்ள ஜே.டி. வான்ஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
“பாப்பரசர் பிரான்சிஸ் காலமான செய்தியை இப்போதுதான் அறிந்தேன். உலகம் முழுவதும் அவரை நேசித்த கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களுக்கு என் இதயம் இரங்குகிறது.
அவரைப் பார்த்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன், இருப்பினும் அவர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஆனால் கொவிட் தொற்றின் ஆரம்ப நாட்களில் அவர் ஆற்றிய மறையுரைக்காக நான் எப்போதும் அவரை நினைவில் கொள்வேன். அது மிகவும் அழகாக இருந்தது. கடவுள் அவரது ஆன்மாவை அமைதிப்படுத்தட்டும்.” என என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
“ஆழ்ந்த நம்பிக்கையும் எல்லையற்ற இரக்கமும் கொண்ட அவர், ஏழைகளை மேம்படுத்துவதற்கும், பிரச்சினை நிறைந்த உலகில் அமைதிக்காக அழைப்பு விடுப்பதற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
மத்திய கிழக்கில் அமைதிக்காகவும், (காஸாவில்) பணயக் கைதிகள் பாதுகாப்பாகத் திரும்புவதற்காகவும் அவர் செய்த பிரார்த்தனைகள் விரைவில் நிறைவேறும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்து பிரதமர் டிக் ஸ்கூப் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
நாம் வாழும் காலத்தில் உலகின் மிக முக்கிய பிரச்சினைகளை அங்கீகரித்து அவற்றிற்கு கவனம் செலுத்திய ஒரு தலைவருக்கு உலகளாவிய கத்தோலிக்க சமூகம் அஞ்சலி செலுத்துகிறது. நிதானமான வாழ்க்கை முறை, சேவை மற்றும் இரக்கச் செயல்கள் மூலம் . பாப்பரசர் பிரான்சிஸ், கத்தோலிக்கர்கள் மற்றும் கத்தோலிக்கரல்லாதவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்தார். நாங்கள் அவரை மிகுந்த மரியாதையுடன் நினைவுகூருகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.