அனைவரின் தொழில்முறை கண்ணியத்தையும், மரியாதையையும் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க பிரதிநிதிகளை 03.02.2026 ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 7 வருடங்களாகப் பாடசாலைகளில் பணியாற்றியுள்ள பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தாம் எதிர்கொண்ட தொழில்முறை மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து அதன் பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு இதன்போது விளக்கமளித்துள்ளனர்.
நிலவும் பிரச்சினைகளுக்குத் தற்போதைய அரசாங்கம் பொறுப்பல்ல என்றாலும், தொழில் வல்லுனர்களாகத் தற்போது தாங்கள் பல தொழில்சார் மற்றும் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் பாடசாலைகளில் பணியாற்றிய அனுபவமுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் பணியில் உள்வாங்குவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்று கூறிய ஜனாதிபதி, ஆசிரியர் சேவை யாப்பிற்கு அமைய, பரீட்சைக்கு தோற்றுமாறும் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.










