இஸ்மதுல் றஹுமான்
கொக்கேய்ன், குஷ், கஞ்சா மற்றும் போதை வில்லைகளுடன் மருந்து உரிமையாளர் ஒருவரை நீர்கொழும்பு பிராந்திய குற்றவியல் விசாரணைகள் பிரிவினர் நீர்கொழும்பு பெரியமுல்லையில் வைத்து கைது செய்துள்ளதாக அக் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சந்தன ரணசிங்க தெரிவித்தார்.
அவர் பயணித்த சொகுசு ஜீப் வண்டியையும் பொலிஸார் கைபற்றியுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு இணங்க நீர்கொழும்பு பிராந்திய குற்றவியல் விசாரணைகள் பிரிவின் பொறுப்பதிகாரியின் கண்காணிப்பில் மோட்டார் சைக்கிள் பிரிவைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர்ளான சதருவன், திஸாநாயக்க, பொலிஸ் சாஜன்களான வன்னிநாயக்க (55000), வீரகோன்(33160), துஷார(21519), பண்டார(72291), பொலிஸ் கான்ஸ்டபல் சுபசிங்க(82233) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழு
பெரியமுல்லை புகையிரத கடவைக்கு பக்கத்தில் திடீர் வீதித் தடையை ஏற்படுத்தி குறித்த வாகனத்தை தடுத்து நிறுத்தி பரிசோதனை செய்த போது சந்தேகநபரிடமிருந்து கோக்கேய்ன் 1 கிராம், கஞ்சா 10 கிராம், 100 போதை வில்லைகளை கைபற்றப்பட்டன. பயணித்த வாகனத்துடன் சந்தேக நபரை கைது செய்து நடாத்திய மேலதிக புலன் விசாரணையில் வெளிவந்த தகவலுக்கு அமைய சந்தேக நபர் தங்கியிருந்த ஏத்துகால் பிரதேச ஹோட்டல் காமராவில் இருந்து 29 கிராம் 240 மில்லி கிராம் குஷ், அடையாளம் தெரியாத போதைப் பொருள் 2 கிராம் 230 மில்லி கிராம் கைபற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபருக்கு சொந்தமான மருந்தகத்தில் நடத்திய சோதனையில் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்து போதையை ஏற்படுத்தும் வில்லைகளை 1100 பொலிஸார் கைபற்றினர்.
போதை மாத்திரைகளை விற்பனை செய்த குற்றத்திற்காக இதற்கு முன்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க இனிமேல் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதில்லையென பொது மக்களிடம் மன்னிப்புக் கோரி பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை 9ம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற பிரதான நீதவான் ரகித்த அபேசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்தி தடுப்புக் காவல் உத்தரவை பொலிஸார் கோரிய போது 7 நாள் தடுத்து வைத்து விசாரணை நடத்த தடுப்புக் காவல் உத்தரவை நீதவான் வழங்கினார்.
பிராந்திய குற்றவியல் விசாரணைகள் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சந்தன ரணசிங்க தலைமையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.










