சோழர் காலம் தொடக்கம் திருக்கோணேஸ்வர ஆலயத்திலிருந்து வந்த பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள தாலி, பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போர்த்துக்கேயர் காலத்தில் திருக்கோணேஸ்வர ஆலயம் உடைக்கப்பட்ட போது சைவ சமயத்தினாரால் பல உயிர்த் தியாகங்கள் செய்யப்பட்டு இந்தத் தாலி பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.
இந்தத் தாலி கொள்ளையிடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து ஆலய நிர்வாகத்தினர் இவ்விடயத்தை அமைதிப்படுத்தி பொதுமக்களை சமாதானம் செய்ய முயன்றனர்.
எனினும் இவ்விடயம் தொடர்பில் மாவட்ட செயலாளர், அரசங்க அதிபர் என சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு பொதுமக்களால் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், காவல்துறையினருக்கும் முறைப்பாடு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்விடயம் தொடர்பில் பொதுமக்கள் ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக, ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பல நூறு கோடி மதிப்புள்ள இரத்தினங்கள், வைடூரியங்கள் பதிக்கப்பட்ட 5 பவுண் தாலியே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.