நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அணிதிரண்டு தலைநகர் காத்மாண்டுவில் திங்கட்கிழமை(செப். 8) பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், போராட்டம் கலவரமாக வெடித்தது.
இந்நிலையில் போராட்டத்தால் சிதைந்து போன நேபாளத்தில் முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கலவரத்தில் நேபாள முன்னாள் பிரதமர் ஜலாநாத் காநலின் மனைவி ராஜ்யலக்ஷ்மி சித்ராகர் செவ்வாய்க்கிழமை(செப். 9) உயிரிழந்தார். காத்மாண்டுவிலுள்ள டல்லு பகுதியில் அவர் வசித்து வந்த வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அதில் வீடு தீக்கிரையானது.
இந்தச் சூழலில், மிகுந்த சிரமத்துக்கிடையே உயிருடன் வெளியே மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜ்யலக்ஷ்மி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்தத் தகவலை அவர்தம் குடும்பத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.