இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பில் டெங்கு, சிக்கன்குன்யா நோய்கள் பரவ ஆரம்பித்துள்ளன.
இம்மாதம் 26 ம் திகதி வரை 31 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜயன்த சிறிவர்தன தெரிவித்தார்.
பெரியமுல்லை, தழுபத்த பிரதேசங்களிலேயே கூடுதலான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் நீர்கொழும்பு நகர், கடற்கரை தெரு, கொச்சிகடை பிரதேசங்களில் ஓரிருவர் டெங்கு நோய்க்கு ஆளாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது அதிகமகவுள்ளது. ஏப்ரல் மாதத்தில் 20 பேர்களே டெங்கு தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
சிக்கன்குன்யா நோயும் நீர்கொழும்பு சுகாதார பிரிவில் பரவலாகக் காணப்படுகின்றன. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுச்செல்வதன் மூலம் இதனை உணரமுடிவதாகவும் சிக்கன்குன்யா நோயாளர்கள் எத்தனை பேர் என உறுதியாகச் சொல்வதற்கு பரிசோதனைகள் இடம்பெறுவதில்லை என்று சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
நோய் பரவுவதை தடுப்பதற்காக ஒவ்வொருவரும் தமது வீடுகளிலும் தொழில் செய்யும் இடங்களிலும் சுற்றுச் சூழலை துப்பரவாக வைத்திருப்பதுடன் நீர் தேங்கி நிற்காமல் இருப்பதற்காக நீர்தேங்கும் பொருட்களை அகற்ற வேண்டும் என சுகாதார பிரிவு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றது.