இஸ்மதுல் றஹுமான்
நிகம்பு முஸ்லிம் வுமன் எஸோசியேஷன் ஏற்பாடு செய்த இலவச வைத்திய முகாம் சனிக்கிழமை காலை நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
அமைப்பின் தலைவி றிஸ்மியா ஹலால்தீன் தலைமையில் நடைபெற்ற இந்த இலவச மருத்துவ முகாமில் விஷேட வைத்திய நிபுணர் வித்யாநிதி டாக்டர் ரிஸ்னி சக்காப் உட்பட துறைசார் வைத்தியர்கள் 18 பேர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.
இங்கு நீரிழிவு, இரத்த அழுத்தம், கொலஸ்ரோல் பரிசோதனை, இருதய நோய், சிறுநீரக நோய், காது மூக்கு தொண்டை, கண், குழந்தை மருத்துவம், சர்ம நோய், அதிக எடையுள்ளவர்கள் தொடர்பாக, பெண்கள் சார்ந்த நோய் போன்ற நோய்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் தேவையான பிள்ளைகளுக்கு தடுப்பு ஊசியும் ஏற்றப்பட்டன.
தொடர்ந்து சிகிச்சை
தேவையான நோயாளிகளுக்கு நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியாசலை மருத்துவ சிகிச்சை நிலையங்களுக்கு தொடர்பு படுத்தப்பட்டனர்.
நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலை மற்று நீர்கொழும்பு சுகாதார வைத்திய நிலையம் என்பவற்றின் ஆதரவுடன் இடம்பெற்ற இந் நிகழ்வில் மருத்துவ ஆலோசனைகளும், சுகாதார விழிப்பூட்டல் கண்காட்சியும் நடைபெற்றன.
விஷேட வைத்திய நிபுணர் வித்யாநிதி டாக்டர் ரிஸ்னி சக்காப், டாக்டர் மேரி ஹில்டா, டாக்டர் ஜயசீலன், தாதி சாமலி பத்மபெரும, நீர்கொழும்பு பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொறுப்பதிகாரி நெய் சகீஹா ஹஸீம் ஆகியோர் விழிப்பூட்டும் விரிவுரைகளை நடாத்தினர். ஆண் பெண் இரு பாலார் என சுமார் 500 பேர் இந்த இலவச மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்றனர்.










