இனவாதம் மற்றும் மதவாதத்தை ஒதுக்கிய, உலகின் அனைத்து நாடுகளும் விரைவான அபிவிருத்தியை அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நல்லிணக்கத்தின் ஊடாக அபிவிருத்தியை அடைவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.
இனவாதமும் மதவாதமும் அரசியல்வாதிகளுக்கு அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் மதத் தலைவர்கள் தமது பதவிகளில் நீடிப்பதற்கும் குறுகிய வழியாக மாறியுள்ளதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நீண்ட கால கசப்பான அனுபவமானது நாட்டைப் பயங்கரமான போருக்கு இழுத்துச் சென்றதையும் நினைவு கூர்ந்தார்.
எனவே நாட்டில் நல்லிணக்கத்தையும் மத நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்காக அரசாங்கம் பல சாதகமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 28.02.2024 நடைபெற்ற “நல்லிணக்கத்துக்கான மதங்கள்” தேசிய சர்வமத மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
17 மாவட்டங்களை உள்ளடக்கி 3 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்ட “மோதல்களைத் தவிர்ப்பதற்கான பன்முக நடவடிக்கைகள்” திட்டத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த சர்வமத மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.