இஸ்மதுல் றஹுமான்
இளைஞர்களுக்கான தொழில் பயிற்சி பாடநெறிகளை ஆரம்பிக்குமாறு நீர்கொழும்பு மாநகர சபை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் சங்கீத் பெரேரா கொண்டுவந்த பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
நீர்கொழும்பு மாநகர சபை மாதந்த கூட்டம் நகர பிதா சட்டதரணி ரொபட் ஹீன்கெந்த தலைமையில் அண்மையில் இடம்பெற்ற போது உறுப்பினர் சங்கீத் பெரேரா பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போது நீர்கொழும்பு பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்க்கையை மேன்படுத்துவது மாநகர சபையின் பொறுப்பாகும். இங்கு தொழில் இன்றியும் கபொத சாதாரண தர, உயர் தர பரீட்சைகளில் சித்தியடைந்த சித்தியடையாத இளைஞர் யுவதிகள் இருப்பதை காண்கிறோம்.
அவர்கள் தொழில் பெறுவதில் பாரிய நெருக்கடிகளுக்கு ஆளாகின்றனர். அதற்கு காரணம் தொழில் பயிற்சியோ அநுபவமோ இல்லாமையாகும்.
இந்தக் காரணங்களை கருத்தில் கொண்டு மாநகர சபையின் தலைமையில் ஏனைய நிறுவனங்களின் ஆதரவுடன் தொழில் பயிற்சி பாட நெறிகளை ஆரம்பிக்க வேண்டும்.
ஆரம்ப கட்டமாக மோட்டார் வாகன இயந்திரவியல், மோட்டார் சைக்கிள் இயந்திரவியல், மின்சார தொழிநுட்பம், வெல்டிங் தொழில்நுட்பம், தச்சு வேலை மற்றும் அழகுக்கலை நிபுணத்துவம் போன்ற பாட நெறிகளை ஆரம்பிக்கலாம். இதன் மூலம் மாநகர சபைக்கும் பயன் கிடைப்பதுடன் எமது பிரதேச இளைஞர் யுவதிகளுக்கும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியும். அதனால் தொழில் பயிற்சி பாட நெறிகளை ஆரம்பிக்குமாறு முன்மொழிந்தார்.
சங்கீத் பெரேரா தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கொழும்பு மாநகர சபைக்கு அடுத்தபடியாக உள்ளது நீர்கொழும்பு மாநகர சபையே. கடந்த காலங்களில் நகர சபையின பணம் வீன்விரயம் செய்யப்பட்டது தவிர மக்கள் சேவை இடம்பெறவில்லை. தற்போது நகரம் அபிருத்தியை நோக்கி பயணிக்கிறது.
இளைஞர்கள் போதைக்கு அடிமையாகிறார்கள். இதனால் ஏற்படும் பிதிப்புகளை ஊடகங்கள் வாயிலாக காண்கிறோம். எமது இளைஞர்களை பாதுகாக்க தேவையான தொழில் பயிற்சிகளை வழங்க வேண்டும் என்றார்.
ஆளும் மற்றும் எதிர் தரப்பு உறுப்பினர்கள் பலர் இப் பிரேரணையை ஆதரித்துப் பேசினர். பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.