பாராளுமன்றத்தில் இன்று (22) இடம்பெறவுள்ள சுகாதார அமைச்சின் நிதியொதுக்கீட்டுக்கான குழுநிலை விவாதத்தில் சுகாதாரத் துறையிலுள்ள பிரச்சினைகள் குறித்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சாதகமான தீர்வுகளை அறிவிக்காவிட்டால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைகள் அடுத்தவாரத்திலிருந்து மேலும் தீவிரப்படுத்தப்படுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
தற்போது வைத்தியர்களினால் முன்னெடுக் கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கை குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார்.அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் பல்வேறு வைத்தியசாலைகளில் வெவ்வேறுபட்ட பணிப்புறக்கணிப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மருந்து தட்டுப்பாடு, வைத்தியர்கள், விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட மனிதவள பிரச்சினைகள், வசதியின்மை போன்றவற்றினால் சுகாதாரத்துறை பெரும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் என்பதை சுகாதார அமைச்சர், அதிகாரிகள், ஜனாதிபதி ஆகியோருக்கு தொடர்ச்சியாக தெளிவுபடுத்தி வருகிறோம்.
ஆனால் இந்த விடயங்கள் தொடர்பில் சாதகமான தீர்வு எடுக்கப்பட்டதாக எங்களுக்கு தெரியவில்லை. இதற்கு தீர்வு வழங்கக் கோரியே இந்தப் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகிறோம்.
நான்காம் நாளாக நேற்றும் (21) பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது. இந்த பணிப்புறக்கணிப்பை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்றால் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வை சரியான காலவரையறையுடன் அரசாங்கத்தரப்பு அறிவிக்க வேண்டும்.
இதுவரையில் அந்த வேலைத்திட்டம் அறிவிக்கப்படவில்லை. நாங்கள் தொடர்ந்து கலந்துரையாடல் நடத்தி வருகிறோம். சரியான கால எல்லையுடன் கூடிய வேலைத்திட்டத்தை அறிவிக்குமாறே கோருகிறோம். அவ்வாறான அறிவிப்பொன்று கிடைக்குமாக இருந்தால் இந்த தொழிற்சங்க நடவடிக்கை குறித்து தீர்மானம் எடுக்க முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துச் செல்வோம்.
சனிக்கிழமை சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கான குழுநிலை விவாதம் இடம்பெறவுள்ளது. இதுதொடர்பில் நாங்கள் மிகவும் அவதானத்துடன் இருப்போம். நாளை சுகாதார அமைச்சரினால் அறிவிப்பு எதுவும் முன்வைக்கப்படவில்லை என்றால், எதிர்வரும் வாரத்தில் மத்திய செயற்குழுவை மீண்டும் அழைத்து தேவையேற்படின் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த தயங்க மாட்டோம்’’ என்றார்.










