வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியிடமிருந்து எழுத்துபூர்வமான இணக்கப்பாடு கிடைத்தவுடன், மின்சார சபை மறுசீரமைப்பு முறை தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்களை அடிப்படையாகக் கொண்டு தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுவதாக அந்த தொழிற்சங்கங்கள் நேற்று (14) அறிவித்தன.
விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் நேற்று முன்தினம் கலந்துரையாடலொன்று இடம்பெற்றதுடன், தற்போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பில் கொழும்பில் நேற்று விசேட செய்தியாளர் சந்திப்பொன்றும் நடத்தப்பட்டது. அதன்போதே தொழிற்சங்கத் தலைவர்கள் இதனை அறிவித்தார்கள்.
இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பு செய்யும் செயன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்சார சபை தொழிற்சங்கத்தினால் கடந்த செப்டெம்பர் 04 ஆம் திகதி நள்ளிரவு முதல் சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்திருந்தனர். அதன் பின்னர், அந்த தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தி மேலும் பல்வேறு நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தனர்.
அதற்கிடையில், மின் விநியோகம் தொடர்பிலான சகல சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டது. இருந்தபோதும் இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மின்சார சபை தொழிற்சங்க அதிகாரிகளுடன் பல்வேறு பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதிலொரு கட்டமாக நேற்று முன்தினமும் வலுசக்தி அமைச்சர் குமார ஜெயகொடியுடன் இன்னுமொரு பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பில் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் இலங்கை மின்சார சபையின் சுதந்திர சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபாத் பிரியந்த கருத்துத் தெரிவிக்கையில்,
‘‘மின்சக்தி அமைச்சர் சகல தொழிற் சங்கங்களுடனும் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். எங்களால் முன்வைக்கப்பட்ட 24 கோரிக்கைகள் ஒவ்வொன்று தொடர்பிலும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அந்த ஒவ்வொரு கோரிக்கைகளுக்கும் அமைச்சர் தெளிவான இணக்கத்தையும் தெரிவித்திருந்தார். அந்த இணக்கப்பாட்டுடன் கலந்துரையாடல் அறிக்கையை கட்டாயம் எங்களுக்கு எழுத்துப் பூர்வமாக பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை தெளிவாக அறிவித்திருந்தோம்.
அந்த எழுத்துப்பூர்வ அறிக்கை கிடைத்தவுடன் இதுவரையில் நாங்கள் முன்னெடுத்து வந்த தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளோம்’’ என்றார்.