தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று (18) காலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், பிலியந்தலை மாற்று வீதியில் உள்ள கோவில் ஒன்றுக்கு முன்பாக சிவப்பு நிற பாதுகாப்பு தலைக்கவசத்துடன் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிற்பகல் 1:30 மணியளவில் பொலிஸ் விசேட படையின் புலனாய்வு அதிகாரி ஒருவர் மோட்டார் சைக்கிளைக் கண்டு, மூத்த பொலிஸ் அதிகாரிக்கு தகவல் அளித்ததாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் இணைக்கப்பட்டிருந்த இலக்கத் தகடு ஒரு காருக்கு பதிவு செய்யப்பட்டது என விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொழும்பு கைரேகைத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு வந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டார்.
சிசிடிவி காட்சிகளின்படி, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் எந்த இடையூறும் இல்லாமல் நடந்து சென்று, காரின் சாரதி இருக்கையில் இருந்த சுதத் குமார் மீது நான்கு முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதில் இரண்டு குண்டுகள் அவரது தோள்பட்டை மற்றும் வயிற்றில் பட்டன. மற்றவை காரைத் தாக்கின. தாக்குதலுக்குப் பிறகு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்.
சம்பவ இடத்திற்கு வந்த ஒருவர், காயமடைந்த சுதத் குமாரை அதே காரில் ஏற்றி களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்தார். சுதத் குமார் நாளாந்த கடன் வழங்குபவர் எனவும், அவர் மீது இதுவரை எந்த குற்றச்சாட்டும் பதிவாகவில்லை எனவும், யாராலும் அச்சுறுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தெஹிவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

July 19, 2025
0 Comment
61 Views