( ஐ. ஏ. காதிர் கான் )
சம்மாந்துறை – திறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட திறனொளியின் “திறமைக்கான தேடல் – 2025” கலை இலக்கிய மாநாடும், “திறனொளியின் முத்துக்கள் 57” கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடும், சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் (2025.08.30) சனிக்கிழமை இடம்பெற்றது.
அமைப்பின் ஸ்தாபகத் தலைவர், “பிறை எப்.எம்.” வானொலி அறிவிப்பாளர் ஏ.சீ. நௌஷாத் வழிகாட்டலுடன், சட்டத்தரணி ஏ.எச்.எம். கிபாயத்துல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா முன்னிலை அதிதியாகவும், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் பிரதம அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
விஷேட அதிதிகளாக மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக், கலாசார உத்தியோகத்தர்களான ஜெஸ்மி எம். மூஸா, எம்.எஸ். ஜௌபர் ஆகியோர்களும், இலக்கிய அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி ரமீஷ் அப்துல்லாஹ், இலங்கைத் திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் ஏ.ஆர். அஸாம் உள்ளிட்ட சம்மாந்துறை பிரதேச சபை கௌரவ உறுப்பினர்கள் பலரும் இச்சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.
“திறனொளியின் முத்துக்கள் – 57” கவிதைத் தொகுப்பு நூலின் முதற் பிரதிகளை, பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா மற்றும் பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் ஆகியோர் வழங்கி வைத்தனர்.
நிகழ்வின்போது, அகில இலங்கை ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட பல்துறை சார்ந்த கலைஞர்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன், கலை இலக்கிய ஊடக தலைமைத்துவ பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.