தபால் சேவையின் எதிர்கால நவீனமயமாக்கலுக்காக இந்த ஆண்டு 2,085 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் ஊடகத் துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
காலி மாவட்டத்தில் பலப்பிட்டிய புதிய தபால் நிலையக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
பலப்பிட்டிய புதிய தபால் நிலையக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக 12.22 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் அதன் கட்டுமானப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் மேலும் கருத்து வௌியிட்ட அமைச்சர்,
தபால் துறையின் நவீனமயமாக்கலின் கீழ் ஒதுக்கப்பட்ட 2,085 மில்லியனில் தபால் துறைக்குத் தேவையான லொறிகளை கொள்வனவு செய்ய 250 மில்லியன் ரூபாய் நிதியும், வாடகை வண்டிகளை வாங்க 320 மில்லியன் ரூபாய் நிதியும், உப தபால் நிலையங்களுக்கு நவீன தொழில்நுட்பத்தைச் இணைக்க தேவையான 1,500 டெப் கணினிகளை வாங்குவதற்கு 180 மில்லியன் ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் அவர் கூறினார்.
அத்துடன் 225 கணினிகளை கொள்வனவு செய்வதற்காக 75 மில்லியன் ரூபாயும், புதுப்பிக்கத்தக்க சூரிய சக்தியை ஓரளவுக்கு வழங்க 40 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய தபால் நிலையங்களை நிர்மாணிப்பதற்காக 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதோடு, இதன் கீழ் 20 புதிய தபால் நிலையங்கள் நிர்மாணிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
தபால் நிலையங்களை நவீனமயமாக்குவதற்கு மேலும் 600 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கண்டி மற்றும் நுவரெலியாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தபால் நிலையங்கள் உட்பட 209 தபால் நிலையங்களை நவீனமயமாக்க தேவையான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இலங்கையின் தபால் சேவையை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்லும் என்றும், நாட்டு மக்களுக்கு சிறந்த மற்றும் வினைத்திறனான தபால் சேவைகளை வழங்க முடியும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.