இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கபில கன்னங்கர தெரிவித்தார்
இதனால் இரத்தினபுரி போதனா வைத்தியசாலை நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
குறித்த வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டடங்களில் நீர் தேங்கி நிற்பதன் காரணமாக, அப்பகுதியில் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதன்காரணமாக இரத்தினபுரி வைத்தியசாலை வளாகத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் நேற்று (27) விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இரத்தினபுரி மாவட்டத்தில் 1,465 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 14,600 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது