2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்களை கௌரவிக்கும் வகையில் ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் தொடர் நிகழ்வின் வடமத்திய மாகாணத்திற்கான நிகழ்ச்சி சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் அனுராதபுரம் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
c6 பாடப் பிரிவுகளின் கீழ் 1-10 வரை இடங்களைப் பெற்ற 241 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா ஊக்குவிப்புக் கொடுப்பனவு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதற்காக ஜனாதிபதி நிதியம் ரூ. 24.1 மில்லியன் செலவிட்டுள்ளது.
ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே வரவேற்புரையாற்றியதோடு இத்திட்டத்திற்கான நோக்கத்தை தெளிவுபடுத்தினார்.
பிரதான உரையை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நிகழ்த்தியதோடு, ஜனாதிபதி நிதியம் அதன் உண்மையான வகிபாகத்தை உணர்ந்து மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள சேவையை வழங்கி வருவதாகவும், அது குறித்து தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டார்.
காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க, வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச ஆகியோரும் விழாவில் உரையாற்றினர். பாராளுமன்ற உறுப்பினர்களான சேன நாணயக்கார, பாக்ய ஸ்ரீ ஹேரத், திலின சமரக்கோன் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதேவேளை, வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களின் துறைசார் அதிகாரிகளுக்கான விசேட ஒரு நாள் செயலமர்வு கடந்த 30ஆம் திகதி அனுராதபுர மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் ஜனாதிபதி நிதிய விடயங்களைக் கையாளும் துறைசார் அதிகாரிகளுக்கு இந்த நிகழ்வில் விளக்கமளிக்கப்பட்டது.
வடமத்திய மாகாணத்தில் ஜனாதிபதி நிதியத்தின் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், பயனாளிகளுக்கு உயர்தர சேவைகளை வழங்குவதற்கும், நவீனமயமாக்கப்பட்ட ஒன்லைன் முறைகளை அறிமுகப்படுத்துவதற்கும், விரைவான சேவைகளை வழங்குவதற்கு தேவையான தெளிவு மற்றும் பயிற்சியை இந்த நிகழ்வு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே, அனுராதபுரம் மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.