நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் எதிர்கால பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் கைத்தொழிற்துறையினர் மற்றும் முதலீட்டாளர்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் முதலீடு செய்ய அரசாங்கம் தயக்கமின்றி செயற்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் 11.09.2025 பிற்பகல் நடைபெற்ற ஆடைத் துறையில் ஈடுபட்டுள்ள தரப்பினர்களுடன் 2026 வரவுசெலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலில் பங்கேற்றபோது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
தற்போதுள்ள கைத்தொழில்களுக்கு வசதிகளை வழங்குவதன் மூலம் முதல் சுற்றில் எதிர்பார்க்கும் முன்னேற்ற இலக்குகளை அடைய ஒரு அணுகுமுறையொன்றை எட்ட முடியும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு ரூபாயையும் அதிக பலன் கிடைக்கும் முதலீடுகளுக்குப் பயன்படுத்துவது அரசாங்கத்தின் கொள்கை என்றும் அவர் தெரிவித்தார்.
கூட்டு ஆடை சங்கங்களின் மன்றம் (Joint Apparel Association Forum) சுதந்திர வர்த்தக வலய உற்பத்தியாளர்கள் சங்கம் (FTZMA) உள்ளிட்ட ஆடைத் துறையில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் பிரதிநிதிகளினால் ஒவ்வொரு துறை சார்ந்த வரவு செலவுத் திட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
உற்பத்திச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட ஆடைத் துறையில் ஏற்பட்டுள்ள புதிய சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து ஆடைத்துறையினர் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர். அனைத்துத் துறைகளுக்கும் வரிச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கம் அங்கீகரிப்பதாகவும், வருமான நிலைகளுக்கு அமைவாக நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாத்து எதிர்காலத்தில் அத்தகைய சலுகைகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
“பரஸ்பர வரி” முறையின் கீழ் அமெரிக்காவினால் இலங்கை மீது விதிக்கப்பட்ட தீர்வை வரி விகிதத்தைக் குறைக்க அரசாங்கம் தலையிட்டதை கைத்தொழில்துறையினர் பாராட்டினர். இதற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்ததோடு எதிர்காலத்தில் இது தொடர்பாக மேலும் சலுகைகளைப் பெற தலையிடுமாறு கோரினர்.
ஆடைத் துறையில் பணியாற்றுகையில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும், உலக சந்தையில் இலங்கை தற்போது காணப்படும் புதிய வாய்ப்புகளை திறம்படப் பயன்படுத்துவதற்கும் சவால்களை எதிர்கொள்வதற்கும் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. இந்த விடயங்கள் குறித்து எதிர்வரும் வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயங்களின் போது கவனம் செலுத்துமாறும் கலந்துரையாடலில் பங்கேற்ற பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.
அரசாங்கம் ஏற்கெனவே கவனம் செலுத்தியுள்ள . சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கான அபிவிருத்தி வங்கியொன்றின் அவசியம் குறித்து கலந்து கொண்ட பிரதிநிதிகள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
ஜனாதிபதி குறிப்பிட்டது போல், ஒன்லைன் முறைமை அபிவிருத்தி (ONLINE SYSTEM DEVELOPMENT) மற்றும் SVAT, Standard VAT வரை மேம்படுத்துவது அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் அணுகுமுறை என்பவற்றுக்கு கைத்தொழிற்துறையினர் இதன் போது நன்றி தெரிவித்தனர். E-Invoice உள்ளிட்ட வரி அறவிடல் வசதிகளை மேலும் மேம்படுத்தவும் அவர்கள் பரிந்துரைத்தனர்.
தற்பொழுது உற்பத்திகளில் 55% பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்புகள் என்றும், எதிர்காலத்தில் இதனை மேலும் அதிகரிக்க எதிர்பார்ப்பதாக கைத்தொழிற்துறையினர் தெரிவித்ததோடு அரசாங்கம் இதற்குத் தேவையான வசதிகளை உருவாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்தத் துறையில் நீண்டகால அனுபவத்தின் அடிப்படையில் நாட்டின் வளர்ச்சிக்காக முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, அந்த முன்மொழிவுகள் அனைத்தையும் ஆராய்ந்து , அரசாங்கம் எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் மற்றும் இது தொடர்பாக நடத்தப்படும் எதிர்கால கலந்துரையாடல்களுக்கான திட்டத்தைத் தயாரிக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஜனாதிபதியின் சிரேஸ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர்களான ரஸல் அபோன்சு, கபில ஜனக பண்டார, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தலைவர் மங்கள விஜேசிங்க மற்றும் ஆடைத் துறையில் ஈடுபட்டுள்ள தரப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.