கூகுள் தனது மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தளமான ‘ஜெமினி’ மற்றும் பிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சேவைகளை இலங்கை மாணவர்களுக்கு இலவசமாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்கும் கூகுள் நிறுவனத்திற்கும் இடையிலான பல மாத கால உரையாடலின் பின்னர் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த புதிய திட்டம் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள், கிளவுட் கம்ப்யூட்டிங் தளங்கள் மற்றும் டிஜிட்டல் கற்றல் வளங்களை இலவசமாக அணுக உதவுமென்றும் இந்த நடவடிக்கை இலங்கையின் செயற்கை நுண்ணறிவு மேம்பாடு, டிஜிட்டல் கல்வியறிவுக்கான தேசிய திறனை கணிசமாக மேம்படுத்துமென்றும், இதன் மூலம் எதிர்கால சந்ததியினர் புதுமைகளை உருவாக்கவும், சிக்கலான சவால்களைத் தீர்க்கவும், உலகளவில் போட்டியிடவும் அதிகாரம் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் செயல்படுத்தல் விரைவில் தொடங்குமென்றும், இது பற்றிய மேலதிக தகவல்கள் பிறகு அறிவிக்கப்படுமென்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளார்










