செயற்கை நுண்ணறிவு (AI) இன்று உலகைப் புதிய தொழில்நுட்ப யுகத்திற்கு இட்டுச்செல்லும் ஒரு பலமான சக்தியாக மாறி வருகிறது. இவ்வாறானதொரு பின்னணியில், மனித குலத்தின் நன்மைக்காக AI-ஐப் பொறுப்புடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ‘AI Impact Summit 2026’ புதுடெல்லியில் நடைபெறுகிறது.
ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் 45-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். மாநாடு கடந்த 16 ஆம் திகதி ஆரம்பமானதுடன், எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
“People, Planet, Progress” – கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட கலந்துரையாடல்
“People, Planet, Progress” என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உச்சிமாநாடு, AI மூலம் பொருளாதார வளர்ச்சி, சமூக சமத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. விசேடமாக வளரும் நாடுகளுக்கு AI தொழில்நுட்பத்தின் அணுகலை விரிவுபடுத்துவது குறித்த ஆழமான கலந்துரையாடல்கள் இங்கு இடம்பெறுகின்றன.
இம்மாநாட்டில் உலகின் முன்னணி தொழில்நுட்பத் தலைவர்கள் பலர் கலந்துகொண்டுள்ளதுடன், சுந்தர் பிச்சை, சாம் ஆல்ட்மேன் மற்றும் ஜென்சன் ஹுவாங் போன்ற தலைவர்கள் பிரதான உரைகளை நிகழ்த்தினர். மேலும் அரசாங்கப் பிரதிநிதிகள், கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் கண்டுபிடிப்பாளர்கள் எனப் பெருமளவானோரும் இதில் இணைந்துள்ளனர்.
மாநாட்டுக்கு இணையாக AI Expo, Hackathon போட்டிகள், ஆராய்ச்சி மாநாடு மற்றும் கொள்கை உரையாடல் தொடர்களும் நடைபெற்று வருவதுடன், சுகாதாரம், விவசாயம், கல்வி மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் புதிய AI தீர்வுகள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
இலங்கையின் பங்கேற்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கு இணங்க, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ‘AI Impact Summit 2026’ இல் கலந்துகொள்வதற்காக 18.02.2026 புதுடெல்லியைச் சென்றடைந்தார். ஜனாதிபதி 19.02.2026 மாநாட்டில் உரையாற்றவுள்ளதுடன், இந்த விஜயத்தின் போது பல இருதரப்புப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடன் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜேசூரிய மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால ஆகியோரும் இணைந்துள்ளனர்.
உலகளாவிய கொள்கைகள் மற்றும் பொறுப்புகள்
AI இன் தாக்கம் எல்லையற்றது என்பதால், அதனைப் பொறுப்புடனும் நியாயமாகவும் பயன்படுத்துவது குறித்த சர்வதேச கவனம் அதிகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், G20 AI கொள்கைகள், மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான உலகளாவிய கூட்டாண்மை (GPAI) போன்ற செயற்திட்டங்கள், AI இற்கான பொறுப்பான உலகளாவிய கட்டமைப்பை உருவாக்குவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளாகக் கருதப்படுகின்றன.
இந்த அனைத்து முயற்சிகளும் AI என்பது ஒரு நாட்டுக்கு மாத்திரம் சொந்தமான தொழில்நுட்பம் அல்ல, மாறாக முழு உலகிற்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் உலகளாவிய விடயம் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.
AI – ஒரு வாய்ப்பா? ஆபத்தா?
AI மூலம் கல்வி, சுகாதாரம், விவசாயம், நிதிச் சேவைகள் மற்றும் அரச நிர்வாகம் உள்ளிட்ட பல துறைகளின் முன்னேற்றத்தைத் துரிதப்படுத்த முடியும் என்பதுடன், வளரும் நாடுகளுக்கு “விரைவான முன்னேற்றத்தை” அடைவதற்கான வாய்ப்பையும் இது வழங்குகிறது. பன்மொழி மற்றும் பல்லூடக திறன்கள் ஊடாக, இதற்கு முன்னர் அணுகலைப் பெறாத மக்கள் கூட்டங்களுக்குக் கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகளைப் பெருமளவில் விரிவுபடுத்த முடியும்.
எனினும், அந்த வாய்ப்புகளுடன் வேலைவாய்ப்புச் சந்தையில் ஏற்படும் மாற்றங்கள், தரவுச் சார்புநிலை, தனியுரிமைப் பிரச்சினைகள் மற்றும் சக்தி நுகர்வு போன்ற ஆபத்துகளும் உள்ளன. எனவே AI தொடர்பான பதில் நடவடிக்கைகள் கொள்கை ரீதியான அறிவிப்புகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், செயற்பாட்டு ரீதியான மற்றும் அளவிடக்கூடிய கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை நோக்கி நகர்வது அத்தியாவசியமானதாகும்.
‘AI Impact Summit 2026’ அந்த உரையாடலை உலகளாவிய மட்டத்திற்குக் கொண்டு சென்று, செயற்கை நுண்ணறிவு ஊடாக எதிர்கால உலகைக் கட்டியெழுப்பும் திசையைத் தீர்மானிக்கும் ஒரு தீர்க்கமான தளமாக முன்னோக்கி வருகிறது.










