மனிதர்களிடமிருந்து தானமாகப் பெறும் இரத்த வகைகளைப் போல அல்லாமல், அனைத்து வகை இரத்தத்துக்கும் பொருந்தக்கூடிய, மிக அவசர காலத்தில் உயிர் காக்கும் சேவைக்காக ஜப்பான் விஞ்ஞானிகள் செயற்கை இரத்தத்தை உருவாக்கி வருகிறார்கள்.
ஆனால், இந்த செயற்கை இரத்தம், மனிதர்களிடமிருந்து பெறப்படும் இரத்த தானத்துக்கு முடிவு கட்டாது என்றும், அதன் ஒரு பகுதியாகவே இது தொடரும் என்றும் கூறப்படுகிறது. துல்லியமாகச் சொல்லப்போனால், காலாவதியான இயற்கை இரத்தத்தின் மறுசுழற்சி என்பதால், மனித இரத்தம் வீணாவதையே இது தடுக்கும், உயிரிழப்புகளைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானின் நாரா மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆய்வகத்தில், பேராசிரியர் ஹிரோமி சகாய் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு செயற்கை இரத்தத்தை உருவாக்கிப் பரிசோதித்து வருகிறது. இது நீல நிறத்தில் இருக்கும் என்றும், இது தயாரிக்கப்பட்டுவிட்டால் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் வரைகூட பாதுகாத்து வைக்க முடியும் என்பதே இதன் சிறப்பாக உள்ளது.
இது தற்போது ஆய்வுகூட சோதனையில் உள்ளது, இது பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் கோடிக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் எந்த மூலையில் இருந்தும் எந்த மூலைக்கும் இதனைக் கொண்டு செல்லலாம். இது அனைத்து இரத்த வகைகளுக்கும் பொருந்தும். தானமாக பெறப்படும் இரத்தத்தின் ஆயுள்காலம் என்பது 42 நாட்கள்தான். ஆனால் செயற்கை இரத்தத்தின் ஆயுள் 2 ஆண்டுகள். அதுவும் அறை வெப்பநிலையிலேயே இதனை 2 ஆண்டுகள் பாதுகாக்கலாம் என்றும், குளிர்சாதனப் பெட்டியில் உரிய குளிர்நிலையில் வைத்து 5 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.