- நீர்கொழும்பு சுற்றுலாத்துறை சங்கம்
இஸ்மதுல் றஹுமான்
வானம், கடல், பூமி ஒன்றினைந்த உள்நாட்டு வெளிநாட்டு பிரஜைகள் பங்குபற்றும் நல்லிணக்க
மாபெரும் தமிழ் சிங்கள புத்தாண்டு விழாவை நீர்கொழும்பு சுற்றுலாத்துறை சங்கம் நீர்கொழும்பு கடற்கரை பிரதேசத்தில் 10, 11 ஆம் திகதிகளில் நடாத்த ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு நீர்கொழும்பு, ஏத்துகால் டொபயாஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.
நீர்கொழும்பு சுற்றுலாத்துறை சங்கத் தலைவர் ஏ. வரணகுமார நிகழ்ச்சி அமைப்பாளர் செனால் பிரனாந்து ஆகியோர் இங்கு கருத்துத் தெரிவிக்கும் போது நீர்கொழும்பு என்பது பல்வேறு இனங்கள், மதங்கள், கலாச்சாரங்கள் ஒன்றினைந்த மற்றும் பல்வேறு வர்த்தக மையங்கள் விஷேடமாக மீன்பிடித் துறை உள்ளடங்கிய நகரமாகும்.
இங்கு சுற்றுலாத்துறை 30 வருடங்களுக்கு மேலான வரலாற்றைக் கொண்டது. அன்று சுற்றுலாத்துறை பெரியளவில் இருந்தாலும் அன்மைக் காலமாக அது வீழ்ச்சியடைந்த நிலையில் உள்ளது. சுற்றுலாத்துறை சங்கமான நாம் ஒன்றினைந்து சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக பாரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதன் ஓர் அங்கமாகவே உள்நாட்டு வெளிநாட்டு பிரஜைகள் பங்குபற்றக் கூடிய விதத்தில் இந்த தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம்.
தேர்தல் காலம் என்பதால் இதனை தாமதப் படுத்தினோம். இலங்கையின் கலாச்சார திருவிழாவாகவே கொண்டாடுகிறோம்.
மே 10 ம் திகதி மாலை 3 முதல் இரவு 12 மணி வரையும் 11ம் திகதி காலை 8 மணி முதல் இரவு 12 மணிவரை டொபயாஸ் ஹோட்டலுக்கு பின்பக்க கடற்கரையில் இடம் பெறும்.
இரவு மரதன் ஓட்டப் போட்டி, ரேசிங் சைக்கிள் ஓட்டம் போட்டி, இரவு வினோத சைக்கிள் ஓட்ட போட்டி, கடற்கரை உதைப்பந்தாட்டப் போட்டி, கடல் நீர் போட்டிகள், வள்ளம் செலுத்தும் போட்டி, தோனி செலுத்தும் போட்டி, சிறந்த அழுகை,சிறந்த சிரிப்பு, தேங்காய் துறுவுதல், தென்னோலை பின்னுதல், மறைந்த நபரை கண்டுபிடித்தல், ஊசியில் நூல் கோர்த்தல், குறுக்காக வழுக்கு மரம் ஏறுதல், கைறு இழுத்தல், இனிப்பு பட்டம் தயாரித்தல், யோகட் ஊட்டுதல், கரண்டியில் தேசிக்காய் எடுத்துச் செல்லல், ரபான் அடித்தல், தலையனை மோதல், முட்டி உடைத்தல், மணல் கோட்டை கட்டுதல், அழகு குமரி, அழகு குமரன் தெரிவு, பரா மோட்டரிங் வினோத உடை போன்ற இன்னோரன்ன போட்டிகள் வானம், கடல், பூமி அடிப்படையாகக் கொண்டு இடம்பெறவுள்ளன.
கம்பஹா மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனம், மெய்வல்லுனர் சங்கம்,சைக்கிள் ஓட்டிகள் சங்கம், கைறு இழுத்தல் சங்கம், ஒன்றினைந்த மீனவ சங்கம் என்பன போட்டி நிகழ்ச்சிகளுக்கான ஆலோசனைகளை வழங்குகின்றன.
போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு 5000 ரூபா முதல் 150 000 ரூபா வரையான பணம் பரிசில்களும் நற்சின்றிதல்களும் வழங்கப்படும்.