போட்டி நிறைந்த பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கட்டம் கட்டமாக இலங்கை முன்னேறி வரும் நிலையில், எதிர்கால வர்த்தக வாய்ப்புகளுக்கான தளமாக இலங்கையை பயன்படுத்திக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீன வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நேற்று (16) பிற்பகல் பீஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெற்ற முதலீடு, வர்த்தகம் மற்றும் சுற்றுலா தொடர்பான அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இலங்கையில் முதலீடு செய்துள்ள மற்றும் முதலீடு செய்யவிருக்கும் பல சீன வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகளும், இலங்கையைச் சேர்ந்த முன்னணி வர்த்தகர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
சீன வர்த்தகர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் புவிசார் அமைவிடம் காரணமாக ஆசிய பிராந்தியத்தில் மேற்கு சந்தையை வெற்றிகொள்வதற்கு இலங்கையைப் பயன்படுத்துவதற்கு விசேட சந்தர்ப்பம் காணப்படுவதாக சுட்டிக் காட்டினார்.
உலகில் உள்ள அனைத்து சக்திவாய்ந்த பொருளாதாரங்களுடனும் நட்புறவுடன் செயற்படுவதே இலங்கையின் எதிர்பார்ப்பு எனவும், அதன் ஊடாக இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்பதே தமது நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, முதலீட்டுச் சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி ஆகியோர் சீன வர்த்தக சமூகம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
![](http://tamil.colombotimes.net/wp-content/uploads/2023/10/16721667-3b0c-42cd-bd8b-aedf29b97305-1024x533.jpg)
![](http://tamil.colombotimes.net/wp-content/uploads/2023/10/986280eb-24ba-45b0-ac91-46d1188dbd50-1024x735.jpg)