சிறுபராயம் என்பது மனித வாழ்வில் அழகான ஓர் அத்தியாயம். ஒரு மனிதன் எவ்வளவுதான் உயரத்தினை அடைந்தாலும் புகழ், சொத்து, செல்வம், அதிகாரங்களோடு வாழ்ந்தாலும் மீண்டும் திரும்பாதா என ஆசைப்படும் ஒரு காலகட்டமாக சிறுபராயம் காணப்படுகிறது.
மனதில் எந்த சுமையும் பாரமும் கவலைகளுமின்றி எல்லாத் தருணங்களிலும் மகிழ்ந்திருக்கக்கூடிய வாய்ப்பு சிறுவர்களுக்குத்தான் இருக்கிறது. அவர்களை மகிழ்வித்துப் பார்ப்பதும் தருணங்களுக்கேற்ப அவர்களை நல்வழிப்படுத்துவதும் இஸ்லாத்தின் வழிகாட்டல்களில் உள்ளவையாகும்.
லுக்மான் அலைஹிஸ் ஸலாம் என்ற நல்லடியார் தனது மகனை எவ்வளவு அன்பாக அணுகி, “அருமை மகனே!” என விழித்து நற்போதனைகள் செய்திருக்கிறார்கள்; அறிவுரைகள் வழங்கியிருக்கிறார்கள்; வாழ்வொழுங்கை போதித்திருக்கிறார்கள் என்பது பற்றி அல்லாஹு தஆலா அல்-குர்ஆனிலே சிலாகித்துப் பேசியிருக்கிறான்.
“என் அருமை மகனே! (பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
“உன் நடையில் (மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல்) நடுத்தரத்தை மேற்கொள்! உன் குரலையும் தாழ்த்திக் கொள்! குரல்களிலெல்லாம் வெறுக்கத்தக்கது நிச்சயமாக கழுதையின் குரலேயாகும். (ஸூறா லுக்மான் : 17, 18, 19)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சூழ பல சிறுவர்கள் இருந்ததோடு நபிகளாரும் அவர்கள் மீது அதிகம் அன்பு செலுத்தக்கூடியவர்களாக திகழ்ந்திருக்கிறார்கள். குழந்தைகளை தன் மடியிலே இருத்தி, முத்தமிட்டு அவர்களுக்காக பிரார்த்தனை செய்திருக்கிறார்கள். வீதியால் செல்லும்போது சிறுவர்களைக் கண்டால் முந்திக்கொண்டு அவர்களுக்கு ஸலாம் கூறக்கூடியவர்களாக திகழ்ந்திருக்கிறார்கள். (பார்க்க- புஹாரி : 6247)
ஒரு கிராமவாசி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, “நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகின்றீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை” என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள், “அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பைக் கழற்றி விட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார்கள். (நூல் : புஹாரி 5998)
“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னையும், ஹஸன் ரழியல்லாஹு அன்ஹு அவர்களையும் கையிலெடுத்து, ‘இறைவா! இவர்கள் இருவரையும் நான் நேசிக்கின்றேன். நீயும் நேசிப்பாயாக!’ என்று பிரார்த்திப்பார்கள்” என நபியவர்களின் பணியாளரது மகனான உஸாமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். தனது பேரரையும் தன் பணியாளரின் மகனையும் பாரபட்சமின்றி ஒன்றாக மடியில் இருத்தி கொஞ்சி விளையாடும் அளவிற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறுவர்களை நேசித்திருக்கிறார்கள். (பார்க்க – புஹாரி 3375)
சிறுவர்களோடு அன்பாக, நகைச்சுவையாக பேசுவதில்கூட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வளவு முன்மாதிரிமிக்கவர்களாக திகழ்ந்திருக்கிறார்கள். அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அபூ உமைர் என்று அழைக்கப்பட்ட ஒரு தம்பி இருந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த சிறுவரிடம் “அபூஉமைரே! பாடும் உன் சின்னக் குருவி என்ன செய்கின்றது?” என்று நகைச்சுவையாக கேட்பார்கள் என நபிமொழிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுவர்கள் எதிர்கால சமூகத்தின் பங்குதாரர்கள். அவர்களை சிறந்த பண்பாடுள்ளவர்களாகவும், ஒழுக்கமுள்ளவர்களாகவும் அடிப்படையிலிருந்தே வளர்த்தெடுக்கவேண்டும். அதற்கு முறையான வளர்ப்புடனான கல்வியறிவு இன்றியமையாததாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறுவர்களுக்கான கல்வி விடயத்தில் எந்தளவுக்கு கவனம் செலுத்தியிருக்கிறார்கள் என்றால் பத்ர் களத்திலே கைதிகளாக பிடிப்பட்டவர்கள் தமக்கு கல்வியறிவு இருந்தால் அவற்றை சிறுவர்களுக்கு கற்பித்துக் கொடுக்கவேண்டும் என்பதை அவர்களுக்கான பிணைத்தொகையாக விதித்திருந்தார்கள். (பார்க்க- ரஹீக் அல்-மக்தூம் : 286)
பொதுவாக சிறுவர்கள் பாரதூரம் தெரியாததன் காரணமாக சிறு சிறு தவறுகள் புரிந்துவிடுவார்கள். அவ்வாறான நிலைமைகளின் போது அவர்களுக்கு புரிகின்ற விதத்திலும், மனம் பாதிக்கப்படாத அடிப்படையிலும் அந்த தவறுகளை அழகிய முறையில் சொல்லித் திருத்தவேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரர் ஹஸன் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சிறுவராக இருந்தபோது ஸதகாப் பொருளான ஒரு பேரீச்சம்பழத்தை எடுத்து வாயில் போட்டுவிட்டார்கள். இதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “சீ! சீ!” எனக் கூறி துப்பச் செய்து விட்டு, “நாம் தர்மப் பொருளைச் சாப்பிடக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா?” என்று கேட்டு தவறு இடம்பெற்ற இடத்திலேயே அத்தவறை அழகிய முறையில் சொல்லிப் புரிய வைத்திருக்கிறார்கள்.
நாமும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போன்று சிறுவர்கள்மீது அன்பு செலுத்தக் கூடியவர்களாக திகழவேண்டும். ஆனால், அந்த அன்பு அவர்கள் புரியும் தவறுகளை மறைக்கும் திரையாக ஒருபோதும் அமைந்துவிடக்கூடாது.
சிறுபராயத்தைப் போலவே மனிதவாழ்வில் மற்றுமொரு கட்டம்தான் முதுமைப்பருவம். ஒரு மனிதன் முதுமைக் கட்டத்தை அடைகின்றபொழுது மனதளவிலும் உடலளவிலும் பலவீனமடைந்துகொண்டு செல்கிறான். அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவன் எதிர்பார்ப்பது தன்மீதான அன்பையும் அரவணைப்பையும் மரியாதையையும் தான்.
“சிறுவர்களுக்கு இரக்கம் காட்டாதவரும் பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தாதவரும் நம்மைச் சார்ந்தவர் அல்லர்” என்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். (நூல்கள் – அபூதாவூத் : 4943, திர்மிதி : 1920)
ஆனால், இன்று அநேகமான முதியவர்கள் பிள்ளைகளால் கைவிடப்பட்டு முதியோர் காப்பகங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்ற துரதிஷ்டவசமான நிலையினை நாம் கண்கூடாக கண்டுகொண்டிருக்கிறோம்.
அல்லாஹு தஆலா அல்-குர்ஆனிலே பின்வருமாறு குறிப்பிடுகின்றான்;
“என்னைத் தவிர யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்! என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் (தாய் தந்தை ஆகிய) அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி ‘சீ’ எனவும் கூறாதீர்! அவ்விருவரையும் விரட்டாதீர்! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக! (ஸூறா பனூ இஸ்ராயீல் : 23)
சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கெதிரான துஷ்பிரயோகங்களை கண்டித்தும் அவர்களது உரிமைகளை பாதுகாக்கவும் ஐ.நா சபையானது அக்டோபர் 01ஆம் திகதியை சர்வதேச சிறுவர்கள் மற்றும் முதியோர் தினமாக பிரகடனப்படுத்தியிருக்கிறது. எனவே, இஸ்லாம் வலியுறுத்துகின்ற அடிப்படையில் எமது சமூகத்திலும் நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் உள்ள சிறுவர்கள் மற்றும் முதியவர்களை மதித்து கௌரவப்படுத்துவதோடு அவர்களது உரிமைகளுக்கும் மதிப்பளித்து நடக்கவேண்டும்.
அல்லாஹு தஆலா எம் அனைவரது சிறுபராயம் மற்றும் முதுமைப்பருவங்களை பொருந்திக் கொள்வதோடு நம் அனைவருக்கும் அவனது அருளை வழங்குவானாக! என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கிறது.
அஷ்–ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை
அஷ்–ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை