இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்கு வந்த யுவதியை பாலியல் துன்புறுத்தல் செய்த டாக்டர் இரு மாதங்களில பின் நீதிமன்றில் முன்னிலையான போது விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
கடந்த ஏப்ரல் 2ம் திகதி சிகிச்சை பெறுவதற்காக வருகை தந்த சீதுவ பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக பாதிக்கப்பட்ட யுவதி வைத்தியசாலை அத்தியட்சகரிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்திருந்தார். அவரின் முறைப்பாட்டிற்கு இணங்க யுவதியை வைத்தியசாலை வார்ட்டில் அனுமதித்து பரிசோதனை இடம்பெற்றன.
நீர்கொழும்பு வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் கடமையிலிருந்து இடைநிறுத்தி வைத்தார்.
பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போதும அவர் வீட்டில் இருக்கவில்லை . விசாரணைக்காக பொலிஸ் நிலையம் அழைத்த நேரத்தில் சமுகமளிக்கவுமில்லை.
நீர்கொழும்பு பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜீனா ஹசீம் நீதிமன்றில் அவருக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடையை பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் மாராவிலயைச் சேர்ந்த குறித்த டாக்டர் நேற்று 2ம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற பிரதான நீதவான் றகித்த அபேசிங்க முன்னிலையில் சட்டதரணி ஊடாக முன்னிலையானர்.
விசாரணை மேற்கொண்ட நீதவான் சந்தேக நபரை இம்மாதம் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
நீர்கொழும்பு பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி ரி.எம்.பீ.பீ. தல்வத்த, சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜீனா ஹசீம், பொலிஸ் கான்ஸ்டபல் பிரசன்ன (106585) ஆகியோர் வழக்கை நெறிப்படுத்தினர்.