(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
இம்முறை வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவருக்கான பாராட்டும் பரிசளிப்பு, மாகாண மட்டத்தில் குண்டெறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவனுக்கான பாராட்டும் பரிசளிப்பு மற்றும் மாணவத் தலைவருக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு என்பன திங்கட்கிழமை (08) காலை விசேட காலை ஆராதனையில் இடம்பெற்றது.
இதன் போது தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களையும் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவன் எம்.எம். ஹசீம் உட்பட பரிசில்கள் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டிய பகுதித்தலைவர் மற்றும் உதவி பகுதித்தலைவர் ஆகியோரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் அண்மையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்ற மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டியில் 14 வயதுக்குட்பட்ட குண்டெறிதலில் 1ஆம் இடம் பெற்று தங்கப்பதக்கம் வென்ற ஜே.எம். ஜினாஸ் என்ற மாணவனையும் பயிற்றுவித்த ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ஆகியோரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் இவ்வாண்டுக்கான மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா பாடசாலையின் ஒழுக்காற்றுக் குழுவினால் இதன்போது நடாத்தப்பட்டது. இதில் நேர்முகப்பரீட்சை ஊடாக தெரிவு செய்யப்பட்ட மாணவத் தலைவர்களுக்கான நியமனக் கடிதம் மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றதுடன் மாணவத் தலைவர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.
பாடசாலைஅதிபர் ரீ.கே.எம். சிராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் ஏ.எம். மிஸ்பாஹ் கலந்து சிறப்பித்ததுடன் மாணவர்களுக்கான பரிசில்களுக்கு அனுசரணை வழங்கி இருந்ததுடன் இந்நிகழ்வில் பிரதி அதிபர், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.