இஸ்மதுல் றஹுமான்
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சவுதி அரேபியா இராச்சியம் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய 50 மெட்ரிக் டன் பேரீச்சம்பழங்களை உத்தியோகபூர்வமாக கையளி்க்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை(16) கொழும்பில் உள்ள சவுதி தூதரகத்தில், இலங்கைக்கான சவுதி தூதர் காலித் பின் ஹமுத் அல்-கஹ்தானியின் தலைமையில் நடைபெற்றது.
மன்னர் சல்மான் அவர்களின் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSrelief) வழங்கிய பேரீச்சம்பழ நன்கொடையை மத விவகாரங்கள் மற்றும் கலாச்சார பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் திரு. அருண் ஹேமச்சந்திரா, சவுதி நிவாரண மையத்தின் (KSrelief) பிரதிநிதி, முஸ்லிம் மத மற்றும் கலாச்சார விவகாரத் திணைக்கள பணிப்பாளர் அமைச்சின் உயர் அதிகாரிகள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் மற்றும் பல மதத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.










