இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, இலங்கை வாழ் மற்றும் உலகவாழ் கிறிஸ்தவ மக்களுக்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், இருளை வென்று ஒளியையும், அச்சத்தை வென்று நம்பிக்கையையும் அடைய முடியும் என்பதே உயிர்த்தெழுந்த இயேசு பெருமான் உலகிற்கு வழங்கிய செய்தி என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“எந்தவொரு இருண்ட இரவும் நிரந்தரமானதல்ல. ஒவ்வொரு சவாலுக்குப் பின்னாலும் நம்பிக்கையின் விடியல் பிறக்கும் என்பதை ஈஸ்டர் செய்தி எமக்கு நினைவூட்டுகின்றது. வாழ்க்கையை மீண்டும் புதிதாக ஆரம்பிக்கவும், தளராத உறுதியுடன் முன்னோக்கிச் செல்லவும் இது எம்மை ஊக்குவிக்கின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தற்போது நிலவும் போர்ச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் குறிப்பிட்ட பிரதமர், வெறுப்பு மற்றும் மோதல்களுக்குப் பதிலாகப் பேச்சுவார்த்தைகளும் புரிந்துணர்வும் மேலோங்கிய, போர் அச்சம் நீங்கிய அமைதியான உலகம் உதயமாக வேண்டும் எனத் தனது செய்தியில் பிரார்த்தித்துள்ளார்.
அன்பு, பொறுமை மற்றும் மன்னிப்பு ஆகிய உன்னதப் பண்புகளால் இதயங்களைப் போஷித்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தியுள்ளார். அனைத்துப் பேதங்களையும் களைந்து, சகோதரத்துவமும் சமாதானமும் மிக்க ஒரே மனிதக் குடும்பமாக இலங்கையைக் கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்க்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அனைத்து கிறிஸ்தவப் பெருமக்களுக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் இறை ஆசீர்வாதம் நிறைந்த இனிய ஈஸ்டர் திருநாள் அமைய வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வாழ்த்தியுள்ளார்.










