சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய (Accreditation) ஆய்வுகூடமொன்றை நிறுவுவதற்காக அமெரிக்க STEMedical மற்றும் இலங்கை உயிரி தொழில்நுட்ப நிறுவனம் (SLIBTEC) என்பவற்றுக்கு இடையே இன்று (15) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான தேசிய அணுகுமுறையின் (NIRDC) வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த 15 மில்லியன் டொலர் முதலீட்டு திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், அமெரிக்காவின் STEMedical சார்பில் அதன் ஸ்தாபகர் பேராசிரியர் ஹான்ஸ் கீர்ஸ்டெட் மற்றும் இலங்கை உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தின் (SLIBTEC) தலைவர் பேராசிரியர் சமித ஹெட்டிகே மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி அமாலி ரணசிங்க ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இலங்கையில் சுகாதாரம், விவசாயம், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் ஆயுர்வேதம் உள்ளிட்ட பல துறைகளிலும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி துறைகளிலும் சோதனை செய்வதற்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களின் திறனை அதிகரிப்பதற்கான நீண்டகால தேவை காணப்படுகிறது.
இந்நிகழ்வில் உரையாற்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கான ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய, இன்றைய தினம் இலங்கைக்கு ஒரு விசேட நாள் என்றும், ஒரு நாட்டிற்கு அங்கீகாரம் மிகவும் முக்கியமானது என்றும் கூறினார்.
2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் ஏற்றுமதி வருவாயை இரட்டிப்பாக்கும் அரசாங்கத்தின் இலக்கை அடைவதில் இதுபோன்ற அங்கீகாரம் பெற்ற ஆய்வகத் திட்டத்தின் முக்கியத்துவத்தை உடுகமசூரிய வலியுறுத்தினார்.
நாடு முழுவதும் உள்ள ஆய்வகங்களுடன் இணைந்து பிரதான ஆய்வகமாக செயல்பட்டு பல்வேறு துறைகளில் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரத்தை இந்த ஆய்வககத்தின் ஊடாக உறுதி செய்வதற்காக எதிர்பார்க்கப்படுகிறது.
STEMedical இன் ஸ்தாபகர் பேராசிரியர் ஹான்ஸ் கியர்ஸ்டெட் குறிப்பிடுகையில், ஆய்வகத் திறனை அதிகரிப்பது போன்ற அறிவியல் துறையின் வளர்ச்சித் தேவைகளை அடையாளம்
காண இந்தத் துறையின் பரந்த பார்வையைக் கொண்ட இலங்கையில் தற்போதைய தலைமைத்துவம் தொடர்பில் தான் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.
இந்தத் திட்டம் மருத்துவ ரீதியாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் நாட்டிற்கு பல நன்மைகளைத் தரும் என்றும் அவர் கூறினார். குறிப்பாக பொருளாதார நிபுணர்களின் கவனமும் நாட்டிற்கு ஈர்க்கப்படும் என்றும், மருந்துகள் போன்ற பொருட்களை நம் நாட்டில் மட்டுமல்ல, ஏனைய நாடுகளிலும் அங்கீகாரத்திற்காக இங்கு அனுப்புவதன் மூலம் வருமானம் ஈட்ட முடியும் என்றும் கியர்ஸ்டெட் கூறினார்.
அமெரிக்காவில் STEMedical நிறுவன ஸ்தாபகரான பேராசிரியர் ஹான்ஸ் கியர்ஸ்டெட், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட முதன்மை உயிரணு (Stem cells) நிபுணர் ஆவார். அவர் அமெரிக்காவில் மீளுருவாக்கம் மருத்துவத் துறையில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்முனைவோராகவும் உள்ளார். தற்போது உலகளாவிய மனித நோயெதிர்ப்புத் திட்டத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவி வகிக்கும் பேராசிரியர் ஹான்ஸ் கியர்ஸ்டெட், டிஸ்கவர் சஞ்சிகையில் உலகின் சிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக அறிவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரஸல் அபொன்சு, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான தேசிய அணுகுமுறையின் (NIRDC) பணிப்பாளர் நாயகம் கலாநிதி முதித செனரத் யாப்பா, அமெரிக்காவின் STEMedical நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, கலாநிதி நிஸ்டர் கேப்ரியல் லோன் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

July 15, 2025
0 Comment
24 Views