சமீபகாலமாக பெண்களிடையே சருமத்தை வெண்மையாக்கும் களிம்பு மற்றும் ஊசிகளின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது.
வைத்தியசாலையின் சருமநோய் பிரிவுக்கு வருகைத்தரும் 100 நோயாளர்களில் ஐவர் சருமத்தை வெண்மையாக்கும் களிம்பு பாவனையால் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சருமநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் இந்திராகாவிட்ட தெரிவித்துள்ளார்.
அத்தோடு சட்டங்கள் கடுமையாக்கப்படாததால் பலர் இவ்வாறான தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளனர்.
எவ்வாறெனினும் சருமத்தை வெண்மையாக்கும் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் பாவனையாளர்கள் முறைப்பாடளிக்க முடியும். முறையான அனுமதி மற்றும் தர நிர்ணயம் இன்றி ஒருவரின் உடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்வதும் குற்றச்செயலாகவே கருதப்படுகிறது என்றார்.
சமூகத்தில் அதிகரித்துள்ள சருமத்தை வெண்மையாக்கும் களிம்பு பாவனை தொடர்பில் நேற்று புதன்கிழமை சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
சமீபகாலமாக பெண்களிடையே சருமத்தை வெண்மையாக்கும் களிம்பு மற்றும் ஊசிகளின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது.
இலங்கையில் மாத்திரமல்ல எந்தவொரு நாட்டிலும் இந்த ஊசிகளை பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இவை சிக்கலான சருமநோய்கள் மற்றும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
இளம் பருவத்தினர் முதற்கொண்டு வயது வந்த பெண்கள் வரை சரும களிம்புகளை உபயோகிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஆண்களும் தற்போது அந்த வரிசையில் இணைந்துள்ளனர்.
அரச வைத்தியசாலையின் சருமநோய் பிரிவுக்கு வருகைத்தரும் 100 நோயாளர்களில் 5 பேர் தோலை வெண்மையாக்கும் களிம்பு பாவனையால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
அழகுசாதணப் பொருட்கள் உரிய தர நிர்னயங்களுக்கு அமைய தாயாரிக்கப்படுவது அவசியம்.
எனினும் சந்தையில் உள்ள களிம்பு தயாரிப்புகளுக்கான முகவரியோ, தர நிர்ணயங்களோ இல்லை.
அது மாத்திரமல்லாது வீடு மற்றும் அழகுகலை நிலையங்களில் அரச அனுமதியின்றி களிம்பு தயாரிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தையில் உள்ள வெண்மையாக்கும் களிம்புகளில் பார உலோக இரசாயனம் உள்ளடங்கியுள்ளது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சான்றிதழ் மற்றும் உணவுப் பொருள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கான உரிமம் ஆகியவற்றை பெற்றுக் கொண்டதன் பின்னரே இவ்வாறான அழகு சாதனப்பொருட்களை சந்தையில் விற்பனை செய்யமுடியும்.
சட்டம் கடுமையாக்கப்படாததால் பலர் இவ்வாறான தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளனர்.
எவ்வாறெனினும் சருமத்தை வெண்மையாக்கும் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் பாவனையாளர்கள் நுகர்வோர் விவகார அதிகார சபை, சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை, சுகாதார அமைச்சின் போலி வைத்தியர்கள் தொடர்பில் புகாரளிக்கும் பிரிவு (1907) ஆகியவற்றுக்கு முறைப்பாடளிக்க முடியும்.
அதற்கமைய குறித்த நபர் அல்லது வர்த்தக நிலையத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பொலிஸ் நிலையத்திலும் இது தொடர்பில் முறைபாடளிக்கலாம்.
முறையான அனுமதி மற்றும் தர நிர்ணயம் இன்றி ஒருவரின் உடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்வதும் குற்றச் செயலாகவே கருதப்படுகிறது என்றார்