556 மில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய தொழில்நுட்ப உபகரணத் தொகுதியை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சில் வைத்து, குறித்த உபகரணத் தொகுதியை அமைச்சர், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் அடையாள ரீதியாகக் கையளித்ததாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சமீபத்திய வரலாற்றில் பொலிஸாருக்காக அதிகூடிய நிதியைச் செலவிட்டு வழங்கப்பட்ட உபகரணத் தொகுதி இதுவெனக் குறிப்பிடப்படுகிறது.
அதற்கமைய பின்வரும் உபகரணங்கள் பொலிஸாருக்குக் கையளிக்கப்பட்டுள்ளன:
365 மில்லியன் ரூபா பெறுமதியான 1,718 கணினிகள்
129 மில்லியன் ரூபா பெறுமதியான 575 நிழற்படப் பிரதியிடும் இயந்திரங்கள்
45 மில்லியன் ரூபா பெறுமதியான வேகமானிகள்
17 மில்லியன் ரூபா பெறுமதியான 1,750 யூ.பி.எஸ் இயந்திரங்கள்
சட்டம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை மேலும் உறுதி செய்வதற்காகப் பொலிஸாருக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் பௌதீக வளங்களை வழங்குவதன் மூலம், மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதும், பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளை இலகுபடுத்துவதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.










