நீர்கொழும்பு நிருபர்
கொழும்பு கத்தோலிக்க மறை மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் மிலன் பிரியதர்ஷனவை பொலிஸார் மிலேச்சத்தனமாக தாக்கியதை கண்டித்து நீர்கொழும்பு மறை மாவட்ட பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் நீர்கொழும்பு மாநகர சபைக்கு முன்னால் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீர்கொழும்பு பிராந்திய தலைமை பிதா சாந்த வெலிவிட்ட தலைமையில் நீர்கொழும்பு மாநகர சபை வளவில் ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான கத்தோலிக்க அருட்சகோதர்கள், அருட் சகோதரிகள் அங்கிருந்து பாதயாத்திரியாக கொழும்பு புத்தளம் பிரதான வீதியில் தெல்வந்த சந்தியை நோக்கி வந்து அங்கு அமைதியான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் “உடல் ரீதியான, மானசீக ரீதியான கொடுமைகளை கண்டிக்கிறோம்”, “மிலான் பிதாவே நாம் உங்களுடன்” என்ற சுலோக அட்டைகளை ஏந்தி நின்றனர். மேலும் அவர்கள் ஜெபமாலையை தமது கைகளில் ஏந்தி ஜெபம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வண. பிதா சிவில் காமினி அவர்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது எந்தவொரு நாட்டு மகனையும் தாக்கும் உரிமை இல்லை. பொலிஸார் நிறுத்தச் சொன்னதை தான் ஆவதானிக்கவில்லை மிலான் பிதா கூறியுள்ளார். அதனை ஏற்றுக்கொள்ள முடியும். காரணம் பொலிஸ் மோட்டார் சைக்கிள்கள் எதிர் திசையிலிருந்தே வந்துள்ளன. பாதிரியார் என்று சொல்லியும் பொலிஸார் தாக்கியுள்ளனர்.
பொலிஸ் என்பது நாட்டில் அமைதி, சட்டம், ஒழுக்கம், மக்களின் பாதுகாப்பை பேனும் நிறுவனம். பொலிஸார் வன்முறையை பாவிப்பதாக இருந்தால் பொலிஸில் ஒழுக்கக்கட்டுப்பாடு இல்லை என்பதே தெளிவிகின்றது. முழு பொலிஸ் திணைக்களத்தையும் குற்றம்சாட்டவில்லை.
பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் இங்கு வந்து எதிர்ப்புத் தெரிவிப்பது பொலிஸாருக்கு எதிராகவோ வேறு எவருக்கும் எதிரிகவோ அல்ல. நாட்டில் சட்டம் ஒழுங்கும் அமுல்படுத்தப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும். பொலிஸாருக்கு தேவையான விதத்தில் நடக்கமுடியாது. அதனை ஒவ்வொரு பொலிஸாரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறான செயல்பாடுகளின்போது நாம் எதிர்க்க வேண்டும். அப்போதுதான் நாட்டை சீர்படுத்த முடியும். அமைதியாக இருந்தால் பிழையான செயல்கள் மாறுவதுமில்லை. மாற்றமடைவதும் இல்லை.
நாம் கேட்பது நீதிமன்றத்தின் ஊடாக தீர்மாணிக்க வேண்டும். நீதிமன்றில் இரு சாராரும் தமது விடுதலைக்கான காரணத்தை முன்வைக்கலாம். யார் சரி யார் பிழை என்பதை நீதிமன்றம் தீர்மாணிக்கும். அதனால் எந்தவொரு பிரஜைக்கும் எதிராக அநியாயம் நடந்தால் வன்முறை இடம்பெற்றால் சட்டத்திற்கு முன் செல்ல வேண்டும். என்றார்.










