- பிரதி அமைச்சர் முனீர் முலப்பர்
இஸ்மதுல் றஹுமான்
குப்பைகளை தேடும் ஊடகவியலாளர்களாக அன்றி உண்மையை தேடுகின்ற ஊடகவியலாளர்களாக இருக்க வேண்டும் என பிரதி அமைச்சர் அஷ்ஷெய்க் முனீர் முலப்பர் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் கம்பஹா மாவட்ட உறுப்பினர்களின் ஒன்று கூடலும் பாடசாலை மாணவர்களுக்காக ஊடக செயலமர்வும் பலகத்துறை கலை இலக்கிய வட்டத்தின் அனுசரனையில்17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பு, போரத்தொட்ட அல் பலாஹ் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வுகளின் இறுதியில் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போது தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என். எம். அமீன் மற்றும் பலகத்துறை கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் எம். ஜே. எம். தாஜூதீன் ஆகியோரின் இணைத் தலைமையில் நடந்த ஊடக செயலமர்வில் கம்பாஹ மாவட்டத்தின் 17 பாடசாலைகளின் மாணவ மாணவிகள் பங்குபற்றினர்.
பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் தொடர்ந்து உரையாற்றுகையில்
ஊடகம் என்பது தனி மனித வாழ்க்கையிலும் ஒரு சமூகத்தின் வாழ்க்கையிலும் ஒரு நாட்டின் போக்கில் ஆட்சியில் என பல துறைகளில் தாக்கம் செலுத்தக்கூடிய ஒரு முக்கியமான துறை. 21ம் நூற்றாண்டில் யார் வசம் ஊடகம் இருக்கிறதோ அவர்கள் உலகை ஆள்வார்கள் என மலேசியா நாட்டின் ஜாம்பாவன் மஹதீர் முஹம்மத் தெரிவித்தார்.
21 நூற்றாண்டில் ஊடகத்தைப் பற்றி பல விடயங்களை பேசலாம். கம்பஹா மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவதற்கு எனக்கு ஊடகங்களின் பங்களிப்பு பாரியதாக இருந்தது. தமிழ் ஊடுங்களுடன் மட்டுமன்றி இந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து ஊடகங்களுடனும் சினேகபூர்வ நல்ல நட்பு இன்றுவரை எனக்கு இருக்கிறது.
இன்றைய தினம் ஊடகத்துறை சார்ந்த மாணவர்களாக முன்வந்துள்ள நீங்கள் அதனைத் தொடர்ந்து கற்று அத்துறை சார்ந்து பணியாற்ற வேண்டும் என்ற உங்களது தயார் நிலைக்கு மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சிறந்த ஊடகவியலாளர்களுக்கு சமூகத்தின் பிரச்சினைகளை உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் கொண்டு செல்லக்கூடிய பாரிய பங்களிப்பை செய்யமுடியும்.
சமூகம் சார்ந்த கல்வி, அரசியல், பொருளாதாரம் என பல துறைகளைச் சேர்ந்த பிரச்சினைகளை சமூகத்திற்கு கொண்டுசெல்வவது யார் எனக் கேட்டால் அது ஊடகவியலாளர்களே. எனவே ஊடகவியலாளர் என்பது தமிழர், முஸ்லிம், சிங்களவர் என்று என்னத் தேவையில்லை.
குப்பைகளை தேடும் ஊடகவியலாளர்களாக அன்றி உண்மையை தேடுகின்ற ஊடகவியலாளர்களாக இருக்க வேண்டும். அவர்களே எமக்குத் தேவை.
ஊடகங்களில் குப்பைகளை ரசித்துரசித்து நாள்தோரும் மக்களுக்கு ஊட்டுகிறார்கள். அதனால் சமூகம் மேலும் வீழ்ச்சியடைகின்றது. சமூகத்தில் போலியான, உண்மைதன்மையற்ற, பிழையான செய்திகளை சமூகமயப்படுத்துவதனால் ஊடாகம் ஒன்றுக்கு சமூகத்தை பிழையான திசையை நோக்கி கொண்டு செல்லலாம்.
பிழையான ஊடகத்தின் காரணமாக ஒரு சமூகமாக நாம் எந்தளவு பாதிக்கப்பட்டோம் என்பதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள். எனவே ஊடகத்துறையில் ஈடுபடுகின்றவர்கள் தனிப்பட்ட நலன்களை தாண்டி அரசியல், வனிகம், பக்கசார்புகளை தவிர்த்து நடுநிலையாக செயல்பட முடியுமாக இருந்தால் அவருக்கு சமூகத்தில் மதிப்புண்டு.
நான் அரசியலில் ஈடுபடும் போது எனது பிழைகளை யாராவது சுட்டிக்காட்டினால் நான் ஆசையுடன் அதனை ஏற்று திருத்திக்கொள்வேன்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் என்ற சொல்லுக்குள் முஸ்லிம் என்ற சொல்லும் இருக்கிறது. முஸ்லிம் என்று வரும்போது அதற்கு பெரிய கணதி ஒன்று உள்ளது சும்ம மீடியாவை விட முஸ்லிம் மீடியா என்ற அடையாளத்துடன் ஈடுபடும் நேரத்தில் அதனைவிட கவனமாக இருக்க வேண்டும்.
பிழைகளை சுட்டிக்காட்டி விட்டுச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் அந்த பிழைகள் சமூகமயப் படுத்தப்படும். அன்மையில் பி.எம்.ஐ.சி.எச். முக்கியமான புத்தக வெளியீடு ஒன்று இடம்பெற்றது. அன்று தினம் பாராளுமன்றததில் மின்சார சபை தொடர்பான சட்டமூல விவாதம் இடம்பெற்றது. குறித்த நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு ஆரம்பமானது. 5.30 மணிக்கு வாக்கெடுப்பில் கலந்துகொள்ள வேண்டும். 6.30 மணிக்கு ஜனாதிபதியின் அழைப்பில் பாராளுமன்ற உறுப்பினர் கூட்டம். குறித்த நிகழ்ச்சியின் இடைநடுவே செல்ல வேண்டி ஏற்பட்டது. முஸ்லிம் மீடியா போரம் அல்லது அங்கிருந்த ஒரு மீடியாக்காரர் பிரதி அமைச்சர் நூலாசிரியரின் உரையைக் கேட்காமல் வெளிக் கிளம்பிச் சென்றுவிட்டார் என யூ டியுப்பில் போட்டார்.
முஸ்லிம்களின் இன்றைய ஹொட் தலைப்பு பலஸ்தீனம் மற்றும் அருகம்பை. மீடியாக்களை வழிநடாத்துபவர்களுக்குத் தெரியும் சமூகத்தை எதனை நோக்கி செல்ல வேண்டும் என்று தமிழ் சமூகத்தை உணர்ச்சி வசப்படுத்துவதற்கு மொழி சார்ந்ததை பேச வேண்டும். முஸ்லிம்களை உணர்ச்சியூட்ட சமயம் சார்ந்த விடயங்களை பேச வேண்டும். இதற்காக தொலைகாட்சிகளில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றனர். பத்திரிகைகளில் முழுப் பக்கமாக கட்டுரைகளை எழுதுகின்றனர். கருத்துக்களை உருவாக்குகிறார்கள்.
எமது நாட்டில் வாழும் ஒரு சாராருக்கு நியாயத்தை நிலைநாட்ட முடியாமல் உலக சுகாதார ஸ்தாபனம் தகனம் வேண்டாம் அடக்கம் செய்யக் கூறிய போதும் அதனை மறைத்து தகனம் செய்தவர்கள் இன்று பலஸ்தீனம் தொடர்பாக முதலைக் கண்ணீர் வடிப்பது கவலைக்குறியதாகும் என்றார்.