( ஐ. ஏ. காதிர் கான் )
“தமிழ்த் தொண்டன்” பைந்தமிழ்ச் சங்கம் மற்றும் “நிலாவட்டம்” இலக்கிய அமைப்பு ஆகியன இணைந்து, தொகுப்பாசிரியர் கவிஞர் என். ஜாகிர் உஷேன் தலைமையில், வட சென்னையில் நடாத்திய பத்தாயிரம் கவிதைகள் உலக சாதனைத் தொகுப்பு நூலான “கவித் தேனருவி” எனும் கவிதைத் தொகுப்பு நூலில் உள்ளடங்கிய “விடியலைத் தேடும் விழிகள்” எனும் சிறப்புக் கவிதை நூல், விரைவில் இலங்கையில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
இந்தியாவில் வெளியான சிறப்பான நூறு கவிதைகளுடன், தனக்கென ஓரிடத்தைப் பெற்று “நோபல் உலக சாதனை” படைத்து, அதற்கான விருதுகளையும் பெற்று, இந்தியாவில் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்ட மாவனல்லை தல்கஸ்பிட்டியவைச் சேர்ந்த எழுத்தாளரும் கவிதாயினியுமான திருமதி நதீரா வசூக்கின் “விடியலைத் தேடும் விழிகள்” எனும் சிறப்புக் கவிதை நூலே இவ்வாறு வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்தின் கேகாலை மாவட்டத்தில் மாவனல்லை கல்வி வலயத்தில் அரநாயக்க கோட்டத்தில் தல்கஸ்பிட்டிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கற்பிக்கும் ஆசிரியையான எழுத்தாளரும் கவிதாயினியுமான திருமதி நதீரா வசூக் அவர்களுக்கு, அவரது இலக்கியப் பயணத்தில் ஆரம்ப காலம் தொட்டு ஆர்வம் இருந்தாலும், 2017 ஆம் ஆண்டு முதலே இலக்கியத் துறையிலான அவரது பயணத்தை “முகநூல்” வாயிலாகவே ஆரம்பித்து, அன்று முதல் தொடர்ச்சியாக எழுதி வருகின்றார்.
சுமார் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட “முகநூல்” குழுமங்களில் “காதல் கவிதை, மரபுக் கவிதை, புதுக்கவிதை, அந்தாதி படக்கவிதை, சமூகக் கவிதை, தன்முனைக் கவிதை, இருவரிக் கவிதை, ஹைக்கூ, சிறுகதை” என தொடர்ச்சியாக எழுதி வருவதோடு, இவரது “கவிதைகள் சிறுகதைகள்” என்பன பத்திரிகைகள் மற்றும் மின்னிதழ்களிலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இதுவரையில், கிட்டத்தட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் பலவற்றையும் பெற்றிருக்கின்றார்.
இதேவேளை, நதீரா வசூக் பல குழுமங்களில் நடுவராகவும் பயணித்து வருவதுடன், தற்போது “கிராமத்துத் தென்றல்” கவிதைத்தளம் “வட்ஸ்அப்” குழுமத்தின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.
முதல் விருதாக, “வானம் வசப்படும்… வா நண்பனே வா” எனும் குழுமத்தில் இருந்து 2019 இல் கிடைத்த “கவித்தாரகை விருது” (தமிழ்நாடு), “கவிமலர்கள்” குழுமத்தில் இருந்து கிடைத்த “முதலாவது உலகசாதனை விருது” (தமிழ்நாடு), 2020 இல் “தனலட்சுமி ரோசாக்கூட்டம்” வழங்கிய “விருது” (தமிழ்நாடு), 2021 இல் “தேனீக்கலை இலக்கிய மன்றம்” வழங்கிய “கவித்தேன்” விருது (இலங்கை), “இதயத்தளம் கலை இலக்கிய வட்டம்” வழங்கிய “இதயப்பாவளர் விருது” (இலங்கை), 2023 இல் “இரண்டாவது நோபல் உலக சாதனை விருது” (தமிழ்நாடு), 2023 இல் “அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் இலக்கியக் கழகம்” ஏற்பாட்டில் வழங்கிய “அருள்வாக்கி ‘வித்துவ தீப’ விருது” (இலங்கை) போன்ற அதி சிறப்பு விருதுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மேலும், இவரது கன்னி வெளியீடாக 2023.03.17 இல் “விடிந்தும் திறந்து கிடக்கின்றது புத்தகம்” எனும் நூல் வெளியிடப்பட்டதுடன், வரும் காலங்களில் இன்னும் பல நூல்களையும் இவர் வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.