புதிய கல்வி சீர்திருத்தங்களில் வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற பொய்யான மற்றும் அரசியல் நோக்கமுடைய பிரச்சாரங்கள் பரப்பப்படுவது மிகவும் கவலைக்குரியது என கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் டொக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் இன்று (17) நடைபெற்ற மேல் மாகாண கல்வி அதிகாரிகள் சந்திப்பு நிகழ்வில் பிரதமர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ், வரலாறு, அழகியல் மற்றும் ஒரு தொழிற்கல்வி பாடம் படிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவை நீக்கப்பட்டதாக பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை. மனித குணங்கள் வளர, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த பாடங்கள் அவசியமானவை. அதனால் அனைத்து மாணவர்களுக்கும் இவை கட்டாயமாக வழங்கப்படும்.
அதோடு, கல்வியை அரசியலாக்கும் நோக்கத்தோடு தவறான தகவல்களை பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், கல்வி மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள. நாம் அரசியலில் ஈடுபடலாம். ஆனால் கல்வியையும், குழந்தைகளையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வில் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன, தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே, தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க, மேற்கு மாகாண ஆளுநர் ஹனிப் யூசுப், பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் நிபுனாராச்சி, சஞ்சீவ ரணசிங்க, ருவன் மாபலகம, கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவா, தேசிய கல்வி நிறுவனம், தேர்வுத்துறை மற்றும் மேற்கு மாகாண கல்வித் துறை அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டார்கள்.